வெள்ளூர் நடுநக்கர் கோவில்- ஸ்ரீவைகுண்டம்

வெள்ளூர் நடுநக்கர் கோவில்- ஸ்ரீவைகுண்டம்

தாமிரபரணி கரையில் சிறப்பு பெற்ற தலங்களில், வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவனின் தலங்களில் நவலிங்கபுரங்கள் ஒன்பது உள்ளன.

வெள்ளூர் நடுநக்கர் கோவில்- ஸ்ரீவைகுண்டம்
           
                      Click Here : Register for Free Training
     
One to One Share Market Training - 9841986753
         One to One Share Market Training 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
 Get Appointment - Whatsapp : 9094047040
Group Share Market Training 
Get Appointment  - Whatsapp - 9841986753

நடுநக்கர், சிவகாமியம்மாள், கோவில் தோற்றம்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் பழம் பெரும் சிறப்பினைப் பறைசாற்றும் வகையில் பெருமாள் கோவிலும், சிவன்கோவிலும் அமைந்துள்ள சிறப்பான ஊர். பச்சை பசேலென்று படர்ந்து கிடக்கும் வயல்வெளிகளுக்குள், பொங்கி கிளம்பும் நீர் சுனைகள் கொண்ட தெப்பக்குளத்தின் பின்புறம் மிகப்பிரமாண்டமாக காட்சி தரும் சிவன்கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

செவ்வேல் அழகன் முருகன், திருச்செந்தூரில் சிவபெருமானைப் பஞ்சலிங்கங்கள் அமைத்து வழிபாடு செய்தது போல், இவ்வூரிலும் நடுநக்கர் எனும் பெயர் தாங்கிய சிவ பெருமானை முருகப்பெருமான் வழிபாடு செய்துள்ளார். இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப்பட்டு அதுவே மருவி ‘வெள்ளூர்’ என அழைக்கப்படுகிறது. முருகப் பெருமானின் வேலை வைத்து வணங்கினர் என்றும், அதனால் இவ்வூர் ‘வேல்லூர்’ என்றழைக்கப்பட்டது என்பர்.

தாமிரபரணி கரையில் சிறப்பு பெற்ற தலங்களில், வெள்ளூர் நடுநக்கர் ஆலயமும் ஒன்றாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் சிவனின் தலங்களில் நவலிங்கபுரங்கள் ஒன்பது உள்ளன. வல்லநாடு திருமூல நாதர், கொங்கராயகுறிச்சி சட்ட நாதர், புதுக்குடி வடநக்கர், வெள்ளூர் நடுநக்கர், மளவராயநத்தம் தென்நக்கர், தெற்கு காரசேரி குலசேகரமுடையார், காந்தீஸ்வரம் ஏகாந்த லிங்ககேஸ்வரர், புறையூர் அயனாதீஸ்வரர், காயல்பட்டணம் மெய்கண்டீஸ்வரர் ஆகியவை அந்த ஆலயங்கள் ஆகும்.

நவலிங்கபுரத்தில் நடுநாயகமாக இருப்பது வடநக்கர், நடுநக்கர், தென்நக்கர் ஆகிய தலங்களாகும். இத்தலத்திற்குத் தெற்கே உள்ள மழவராயநத்தத்தில் தென் நக்கரும், வடக்கே உள்ள புதுக்குடியில் வடநக்கரும் வீற்றிருக்கிறார்கள். இரண்டு தலத்திற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ள காரணத்தினால், இங்குள்ள பெருமான் ‘நடுநக்கர்’ எனவும் அழைக்கப்படுகிறார். அகத்திய மாமுனிகள் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூஜித்து வழிபட்டதாகப் புராணச் செய்திகள் கூறுகிறது.

இத்திருக்கோவிலில் அன்னை சிவகாமி அம்மாள், மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி அருளுகின்றாள். இந்த அன்னை, சிவபெருமானின் வலது புறத்தில் தவக்கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். இங்கு வந்து திருமண தடை நீங்க வேண்டி நிற்போருக்கு உடனே திருமணம் நடைபெறுகிறது. குழந்தை வரமும் கிடைக்கிறது.

‘நக்கல்’ என்றால் ஒளி. ஒளியுருவானவர் ‘நக்கர்’ என பொருள் கொள்ளலாம். ‘நக்கல்’ என்றால் ‘சிரித்தல்’ என்ற பொருளும் உண்டு. சிரித்த முகத்தோடு அமர்ந்து அனைவர் பிரச்சினையையும் தீர்க்க வல்லவர் என்றும் இத் தலத்து இறைவனுக்கு பொருள் கூறலாம். முப்புரங்களை எரித்தவர் என்பதால் ஈசனுக்கு ‘நக்கர்’ என்ற பொருளும் உண்டு. ‘நக்கர்’ என்றால் ‘ஆடையில்லாதவன்’ என்ற பொருளும் உண்டு. இதுபோல் பல அர்த்தங்களை தரக்கூடிய இறைவன் இங்கே அருள்புரிகிறார். சிவபெருமான் ‘நடுநக்கர் மத்திய பதீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். ‘நடுநக்கர்’ என்பது தூய தமிழ்ச் சொல். மத்தியபதீஸ்வரர் என்பது அதற்கு இணையான வடமொழிச் சொல் என்பர். ஒரே பொருள் கொடுக்கின்ற இரண்டு மொழிகளின் சொற்களும் இணைந்து இறைவனின் திருப்பெயராக அமைந்துள்ளது சிறப்பாகும்.

இரண்டு சிவநெறி செல்வர்களுக்கு இடையில் சிவபக்தியில் சிறந்தவர்கள் யார் என்ற வழக்கும் ஏற்பட்டது. இந்த வழக்கை யாராலும் தீர்க்க முடியவில்லை. இறைவன் முதியவர் போல தோன்றி, அவர்கள் இருவரின் வழக்கைத் தீர விசாரித்தார். சிவபக்தியில் ஒருவருக்கு ஒருவர் சிறந்தவர்கள் அல்ல. எல்லோரும் சரிசமமானவர்களே என அறிவுறுத்தி அவர்கள் அறியாமையைத் தீர்த்து வைத்தார். துறவி வடிவில் வந்து தீர்ப்பு வழங்கியதால் இறைவன், ‘மத்தியபதீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார்.

இவ்வூரில் பெருமாள் கோவிலும், சிவன் கோவிலும் மிகப்பிரமாண்டமாக உள்ளன. 1944-க்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. அதன்பின் பல வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தற்போது கோவில் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. அரசு ஆவணங்களின்படி இவ்வூர் பெருமாள் கோவிலில் ஆறுக் கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வூர் ‘வேலூரான மதுரோதையபுரம்’ என்றும், ‘வெள்ளூரான மதுரோதையபுரம்’ என்றும் இரண்டு வகையான பெயரில் குறிப்பிடப்படுகின்றது.

பெருமாள் கோவிலில் எழுந் தருளி இருக்கும் இறைவன் தற்போது ‘அழியங்கைப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். ‘தம்பித்துணை விண்ணகர் எம்பெருமாள்’ என்பதும், ‘தம்பித்துணை விண்ணகர் ஆழியார்’ என்பதும் கல்வெட்டுக்களுள் காணப்படும் இறைவன் பெயர்களாகும். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் பழமையானது, சடாவர்மன் குலசேகரனுடையது ஆகும். எனவே இக்கோவில் அவன் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும்.

மகா மண்டபம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் எழுப்பப்பட்டதை, இம்மண்டபக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடப்படுகின்றது. சடாவர்மன் குலசேகரன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகரன், மாறவர்மன் குலசேகரன் ஆகிய மன்னர்களுடைய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இவ்வூரின் சிவன் கோவில் கல்வெட்டுக்கள் இக்கோவிலை ‘நற்காண்டார் கோவில்’ என்று குறிப்பிடுகின்றன.

வீரபாண்டியனுடைய துண்டுக் கல்வெட்டு ஒன்றும், குலசேகரப்பாண்டியனுடைய துண்டு கல்வெட்டு ஒன்றும் இக்கோவிலில் காணப்படுகின்றன. இக்கோவிலின் தென்கிழக்கு மூலையில் ‘கங்கை அம்மன்’ என்ற பெயரில் துர்க்கையின் கற்சிற்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இத்திரு உருவம் எட்டு திருக்கரங்களோடு அசுரனை வதம் செய்யும் நிலையில் அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இத்திருக்கோவில் ஆகம விதிப்படி பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிய மன்னர்களான வீரபாண்டிய சடாவர்மன், குலசேகர பாண்டியன் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் பிரபவ வருடம் கொல்லம் 109-ம் ஆண்டு தை மாதம் ஞாயிற்றுக்கிழமை (ஆங்கில வருடம் கி.பி. 934-ல்) கட்டப்பட்ட பழமையும், பெருமையும் வாய்ந்தது என்பதை உணர்த்தும் கல்வெட்டுகள் தற்போது கிடைத்துள்ளன.

இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவர் தலையில் கிரீடத்துடன் காணப் படுகிறார். எனவே இவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை செய்து வழிப்பட்டால் தேர்தலில் வெற்றி கிடைக்கும். இதற்கான சிறப்பு பூஜை இக்கோவிலில் நடை பெறுகிறது. ஒளி வடிவமானவர் ‘நக்கர்’ என்ற பொருளுக்கேற்ப, மூலவர் நடுநக்கர் சன்னிதிக்குள் வித்தியாசமான ஒளி பரவுவதை இங்குள்ள பக்தர்கள் கண்டு பரவசமடைந்துள்ளனர்.

புதுக்குடியில் உள்ள வடநக்கர் கோவில் சிதையுண்ட காரணத்தினால், வடநக்கர் மூலவர் நடுக்கர் ஆலயத்தில் இடது புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த கோவிலில் வந்து வணங்கி நின்றால் இரண்டு சிவனை வணங்கிய புண்ணியம் கிட்டும். இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவும், சூரசம்ஹாரமும் மிகச்சிறப்பாக நடைபெறும். ஐப்பசி திருக்கல்யாணம், நவராத்திரி 9 நாள் கொலுவும், தை அமாவாசை சப்பரத்தில் சிவன் சக்தியின் புறப்பாடும் மிகவும் பிரசித்தம். திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை விழா மற்றும் சுவாமி புறப்பாடும், மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி, பவுர்ணமி, அமாவாசை, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கார்த்திகை உள்பட பூஜைகளும் மிகச்சிறப்பாக நடைபெறும்.

16 வகை செல்வம் தரும் மாசி திருவிழா

இத்திருக்கோவிலில் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சதய நட்சத்திரத்தில் தொடங்கி, திருவாதிரை நட்சத்திரத்தில் திருவிழா நிறைவு பெறும். 6-ம் திருவிழாவை முன்னிட்டு சிவபெருமான் தேவமாந்தர்களை கண்டு மையல் கொண்டதாகவும், இதையறிந்து மீனாட்சி சிவனிடம் ஊடல் கொண்டதாகவும், அன்னையை சுந்தரர் நேரில் சென்று சமாதானம் செய்வதாகவும் ஐதீகம். இதற்காக ஓதுவார், சுந்தரர் பாடல்களை பாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான செம்பு பட்டயம் கோவிலில் உள்ளது.

9-வது திருவிழாவில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக திருத்தேர் பவனி நடைபெற்று வருகிறது. 10 நாள் திருவிழா தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது. இக்கோவிலுக்கு வந்து வணங்கி நின்றால் வெண்குஷ்டம் போன்ற நோய்கள் தீருகிறது. திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மைகள், பொன், நல்வாழ்வு, நெல், நுகர்க்கி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோய் இன்மை, வாழ்நாள் போன்ற 16 செல்வங்களும் கிடைக்க, இக்கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட்டால் கிடைக்கும் என்கிறார்கள்.

இவ்வூரை சேர்ந்தவர்கள் எந்த வேலையை தொடங்குவதாக இருந்தாலும், நடுநக்கரை வணங்கியே தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

இந்த கோவிலுக்குச் செல்ல திருநெல்வேலி - திருச்செந்தூர் ரெயில் மற்றும் பஸ் மார்க்கத்தில் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி என்னும் இடத்தில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால், வெள்ளூரை அடையலாம்.