Showing posts with label பிதுர் தோஷ பரிகாரம்!. Show all posts
Showing posts with label பிதுர் தோஷ பரிகாரம்!. Show all posts

பிதுர் தோஷ பரிகாரம்!

பிதுர் தோஷ பரிகாரம்!

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.
உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும்,காட்டுகிறது.
இந்த பிதுர்தோஷம், மனைவி, பெற்றோர், குழந்தைகள், உறவினர்களிடையே பிரச்னைகளை தீராமல் வளர்க்கக் காரணமாகிறது.
இந்தப்பிறவியில் கூட கடவுளை கேலி செய்பவர்கள்,பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பிதுர்தோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள். பித்ரு தோஷம் ஒருவரது/ஒருத்தியின் பிறந்த ஜாதகத்தில் அமைந்துவிட்டால், மற்றக்கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது. பித்ரு தோஷம் நீக்கியப்பிறகுதான் பலன்கள் தரத் துவங்குகின்றன.
ஊரை அடித்து உலையில் போடுமளவுக்கு பணத்தாசை பிடித்து அலைபவர்கள் செய்யும் பாவங்கள் இந்தப்பிறவியிலேயே அவர்களின் மூத்த பிள்ளை (அது பெண்ணாக இருந்தாலும்)யை அல்லது கடைசிப் பிள்ளையைக் கடுமையாகப் பாதிக்கின்றது.அரசியலில் இருப்போர்,தேர்தலில் ஜெயித்தவர்கள்,மாநில மத்திய அரசுப் பணியில் இருப்போர்,அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுப்போர், பலரது தலையெழுத்தையே மாற்றும் அதிகாரத்தில் இருப்போர்கள் மனிதத் தன்மையின்றி செயல்படுவதால்(துட்டடிக்கும் நோக்கிலேயே கொள்கைகளை வகுப்பதால்) அவர்களுக்கு உடனுக்குடன் பாதிப்பை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அனுபவித்துவருகின்றனர்.இவை மிகவும் கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்குகின்றன.
பிதுர் தோஷம் நீக்கிட உரிய ஜாதகர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் அல்லது துலா ஹோமம் செய்ய வேண்டும். நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக்கூடாது. சிரத்தையுடனும், முழு மனதுடனும்,ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும்.அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணு நம்மை இந்த செயல் செய்தமைக்கு ஆசிர்வதித்தாக அர்த்தம்.