ஓம் என்றால் என்ன?

ஓம் என்றால் என்ன?



    ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது.இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து வைத்துள்ள ஒரு பெயராகும்.

    மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடப்படும் பெயர்கள் எல்லாம் வேதத்திலிருந்து எடுத்தே இடப்பட்டன.அதாவது அந்த பெயர்கள் அவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதன் தன்மையை வெளிப்படுத்துமாறு சூடப்பட்டன.ஆனால் மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் சில சமயம் அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடுவதுண்டு.உதாரணமாக, வீரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்கு பொருத்தமில்லாமல் கோழையாக இருப்பான்.  அதே போல் இலட்சுமி என்ற பெயர் கொண்டவள் பிச்சைக்காரியாக இருப்பாள்.சரஸ்வதி என்ற பெயர் வைத்துக் கொண்டு படிப்பறிவில்லாதவளாக இருப்பாள்.  ஆனால் இறைவனின் ஓம் என்ற நாமமும் அதன் முடிவற்ற பொருளும் அந்த ஒப்பற்ற ஓர் இறைவனுக்கே முழுமுதலாய் பொருந்தியிருக்கிறது.

    மனிதன் பிறக்கும் போது நாமம் இன்றி பிறக்கிறான்.பிறந்த சில நாட்கள் கழித்து அவனுக்கு, பெயர் சூட்டும் விழா எடுத்து பெயர் இடப்படுகிறான்.பின்பு அவன் பெற்றோர், உறவினர் மற்றும் இந்த சமூகத்தார் அவனை அந்த பெயரால் அழைக்கின்றனர். மேலும் அவன் பெற்றோர் இட்ட பெயரைத் தவிர உறவுமுறை பெயர்களாலும் அவன் அழைக்கப்படுகிறான்.எடுத்துக்காட்டாக, அவனுக்கு திருமணம் ஆகியதும் கணவன் என்ற நாமமும், குழந்தை பிறந்தவுடன் அப்பா என்ற நாமமும், தன்னுடைய தாய் தந்தைக்கு மகன் என்ற நாமமும், தந்தையின் தந்தைக்கு பேரன் என்ற நாமமும், இவனுடைய மகனின்/மகளின்குழந்தைக்கு தாத்தா என்ற நாமமும் உறவுமுறைகளால் ஏற்படுகின்றன.இது தவிர, சில குணங்களையோ, குற்றங்களையோ குறிக்க சில பட்டப் பெயர்களும் அவனுக்கு சமுதாயத்தால் வாய்க்கின்றன.உதாரணத்திற்கு இராமனையும், ஹனுமானையும், கிருஷ்ணனையும் நாம் பல பெயர்களால் அழைக்கிறோம்.காரணம் அவர்களின் பலம், வீரம், தீரம், சூர பராக்கிரம செயல்களைப் பாராட்டி.  அதே போல் இறைவனையும் நாம் சிவன், விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி, சனி, குரு, இலட்சுமி, இந்திரன், மித்ரன், வருணன், யமன், வாயு, அக்னி, ஆப: என்று பல பெயர்களால் அழைக்கிறோம்.  மேற்கூறிய நாமங்கள் யாவும் இறைவனின் குணங்களையோ, தத்துவங்களையே குறிப்பனவே அல்லாமல் உருவங்களை அல்ல.  மேலும் மற்ற எல்லா பெயர்களும் இறைவனின் நிஜ நாமமான ஓம் என்பதிலிருந்தே  வெளி வந்தன.  ஓம் இறைவனின் மிக முக்கியமான,தன்னியற்கையான நாமம். மற்ற நாமங்களெல்லாம் குணவாகுப் பெயர்களே!

   ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது.வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க "ஓம்" என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது.வால்மீகி மூல  இராமாயணத்தில் இராமன்பிரான்காலையில் எழுந்து ஓங்காரத்தை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்க நாமோ வெறும் இராம நாமம் சொல்வது இராமபிரான்செய்ததற்கு எதிராக செய்வதாகும்.

   முன்பு எல்லா ரிஷி,முனிகளும் ஓம், அத என்று சொல்லிதான் நூல்களை ஆரம்பித்தனர். பௌராணிகர்களும் தங்கள் இஷ்ட தெய்வத்தை அழைக்கும் போதும் "ஓம் நம: சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் பகவதயே நம:, ஓம் கணேசாய நம:, ஓம் சரவண பவ" என்று தான் ஆரம்பிக்கின்றனர். மேலும் தந்த்ர நூல்களும் "ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்" என்றே தொடங்குகின்றன.மேலும் பௌராணிகர்கள் ஓங்கார யந்திரம் கூட செய்கிறார்கள். ஆனால் நாமோ இன்று “ஹரி ஓம்” என்றுசொல்லிஇறைவனின் முக்கிய முதல் நாமத்தை பின்னுக்குத் தள்ளி ‘ஹரி’ என்று முதலில் சொல்கிறோம்.  இனிமேலாவது நாம் “ஓம் ஹரி”அல்லது “ஓம்” என்று உச்சரிக்கத் தொடங்குவோமாக.  இனி ஓங்காரத்தைப் பற்றி மற்ற நூல்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

    அதர்வம் 14-3-6: ''ஓங்காரம் இசைக்கவும், உபாசிக்கவும், பற்றக்கூடியதும், இலயிக்கக் கூடியதும் என கூறுகிறது." பக்தி செய்ய எல்லாவற்றையும் விட அழகிய சாதனம் ஓங்காரமாகும்.

    கோபத பிராஹ்மணத்தில் கூறப்படுகிறது - "ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:" அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான வழிகாட்டுவதுமாகும் என்று. மேலும் "அம்ருதம் வை ப்ரணவ:" என்கிறது கோபதம்.  அதாவது ஓம் அது அம்ருதம் - அமுதமாகும் என்று.

    சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்:- ஓங்கா£ரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது என்று புகழ்கிறார்.

     யோக தர்சனத்தில் "தஸ்ய வாசக ப்ரணவ:" என்று கூறப்பட்டுள்ளது.  அதாவது அவனுடைய நாமம் பிரணவம் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

  முண்டகோபனிஷத் கூறுகிறது:- ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தாலேயே நடக்கிறது என்று.

    கடோபனிஷத்:- எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ, பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ,அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.

    தைத்திரிய உபநிஷத்:-"ஓம் இதி ப்ரஹ்ம", "ஓம் இதி இதம் ஸர்வம்" அதாவது ஓங்காரமே பிரம்மம், அந்த முடிவற்றஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம் என்று சிறப்பிக்கிறது.

    அக்னி புராணம்:- ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி, அவனே துக்கத்தை வென்றவன் என்கிறது.

சுபாவமான ஒலி (தன் இயல்பான ஒலி):-

    பிறந்த குழந்தை தன் மழலை மொழியில் அ, உ, ம, ஓம், ஓம் என்கிறது.அழுவதும் கூட அப்படியே தான்.அந்த குழந்தை எழுப்பும் ஓசையை சற்று உற்று கவனித்தால் விளங்கும்.
 வயதான பல்லிழந்தவர் கூட "ஓமை" நன்றாக சொல்ல முடியும்.  பிறந்த குழந்தை பருவம் முதல் ஒன்றிரண்டு வயது வரை இராமன், கிருஷ்ணன் என்று சொல்ல வராது.ஆனால் ஓம் என்று சொல்ல நன்றாக வரும்.அதே போல் பல் விழுந்த முதியவருக்கும் ஓம் என்று நன்றாக சொல்ல வரும்.இராம் என்று சொல்ல சொன்னால் லாம் என்று வார்த்தை குழறி வரும்.காரணம் ஓம் ஓர் இயல்பான இயற்கையான ஒலி.

ஒரு விவாதம்:-

    ஒரு சமயம் ஓர் ஆர்யசமாஜ பண்டிதருக்கும் ஓரு மௌல்விக்கும் விவாதம் நடந்தது.அதாவது இறைவனின் முக்கிய நாமம் எது என்பதில்.பண்டிதர் சொன்னார், ஓம் என்பதே இறைவனின் முக்கிய நாமம் என்று.  ஆனால் மௌல்வியோ அல்லாஹ் தான் இறைவனின் முக்கிய நாமம் என்று வாதாடினார்.(இங்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், ஈஸ்வரன் பெயர் அல்லாஹ் அல்ல, ‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ என்று கூறுவது பிழையானது).  மேலும் அதை நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார்.பண்டிதர் அவர்கள் உடனே இரண்டு காட்டமான சோடாவை வாங்கி வரச் செய்து, முதல் சோடாவை மௌல்வியிடம் குடிக்க கொடுத்தார்.  மௌல்வி குடித்து முடித்ததும் “ஓவ்” என்று ஏப்பம் விட்டார்.ஏன் “ஓவ்” என்று ஏப்பம் விட்டீர்கள்?அல்லாஹ் என்று உச்சரிக்க வேண்டியது தானே என்று பண்டிதர் வினவினார்.உடனே மௌல்வி அல்லாஹ் என்று கூட சொல்வேனே என்று பதிலுரைத்தார்.  பண்டிதர் மீண்டும் இரண்டாவது பாட்டில் சோடாவை உடைத்து மௌல்வியிடம் குடிக்க கொடுத்தார்.  குடித்ததும் மௌல்விக்கு மிக வேகமாக ஏப்பம் வந்தது.அவரால் அல்லாஹ் என்று சொல்ல முடியவில்லை. மேலும் பண்டிதர், அல்லாஹ் என்று உம்மால் சொல்ல இயலவில்லை, ஓங்காரத்தின் மாற்றமான ஒலியே தங்களுக்கு ஏப்பமாக வெளிப்பட்டது என்று விளக்க மௌல்வி ஒத்துக் கொண்டார்.ஆமாம் பண்டிதரே, அல்லாஹ் என்று சொல்ல வரவில்லை என்று.அப்பொழுது பண்டிதர் சொன்னார் - அல்லாஹ் இயல்பான ஒலி அல்ல.ஓம் மட்டுமே இயல்பான ஒலி, எளிமையான இனிமையான ஒலி, நாம் அறிந்தும் நம்மை அறியாமலும் வரக்கூடிய ஒலி.

சிறியதினினும் சிறியது, பெரியதினும் பெரியது:-

    இறைவன் நுண்மையினும் நுண்மையானவன்.சிறியதினும் சிறியதாய் பெரியதினும் பெரியதாய் உள்ளவன்.அவனின் நாமமான ஓம்என்றஒலி அளவில் மூன்றுமாத்திரை தான்.மற்ற நாமங்களோ மாத்திரை அளவில் பெரியது.  ஆயினும் ஓங்காரத்தின் அர்த்த விளக்கமோ விளக்க முடியாதது, முடிவற்றது, பெரியதினும் பெரியது.அந்த மூன்றுமாத்திரை என்பதின் மகத்துவம் அளவற்றது.பின்வருவன மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்று மாத்திரைகளின் தத்துவங்களாக விளக்கப்படுகின்றன.

1. ஈஸ்வரன், ஜீவன், இயற்கை
2. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன்
3. பூ:,புவ:, ஸ்வ:
4. சத்வம், ரஜம், தமம்
5. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்
6. மாதா, பிதா, குழந்தை
7. எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான்
8. நிமித்த காரணம், உபாதான காரணம், சாதாரண காரணம்
9. ஆண், பெண், அலி
10. சூரிய கலை, சந்திர கலை,சுழுமுனை
11. சூரியன், சந்திரன், நக்ஷத்திரம்என இவ்வாறாக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஓம் விளக்கம்:-

    அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது.இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து.மேலும் ‘அ’ என்பது இறைவனையும், ‘உ’ என்பது உலக உயிர்களையும், ‘ம்’ என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும்.இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த ‘அ’, ‘உ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ‘ம்’ என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும்.முதலில் தாயின் கர்ப்பத்தில் அது நம்மை காக்கிறது.அதனால் நாம் நிலைப் பெற்றோம்.

இலக்கண விளக்கம்:-

    ஓம் என்ற சொல் ஆண் பாலும் அல்ல, பெண் பாலும் அல்ல, அலியும் அல்ல. ஒருமை ஒலியே. இதற்கு இருமையோ பன்மையோ கிடையாது.வேற்றுமை உருபுகளும் அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ளஉருபுகளும் இதற்கு கிடையாது.இலக்கண வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.    மேலும் ஓம் 'அவ்' என்ற தாதுவில் - வேர்ச்சொல்லிலிருந்து உண்டாகிறது.  'அவ்' என்றால் இந்த உலகம் மற்றும் உயிர்களின் இரட்சகன் - பாதுகாவலன் என்று பொருள். மேலும் இது "அவ்யயம்" ஆகும். அதாவது மாறுதலற்றது, சாசுவதமானது. இலக்கணத்தில் எண், பால், இடத்தால் மாறுபாடு அடையாத சொல்.(வினை உரிச்சொல், இடைச்சொல், விளிச்சொல் முதலியன).எனவே இறைவன் ஒருவனே என்பது இதன் மூலம் சித்தமாகிறது.


மற்ற மதங்களில் ஓம்:-

    கிறிஸ்துவ மதத்தில் ஓம் என்ற சொல் ஆமென் என்ற ஒலியின் மூலம் உச்சரிக்கப்படுகிறது,  இஸ்லாம் மதத்தில் ஓம் என்ற சொல் ஆமீன் என்ற சொல்லால் உச்சரிக்கப்படுகிறது. புத்த மதத்தில் ஓம் மணி பத்மோஹம் என்று உச்சரிக்கப்படுகிறது.ஜைன மதத்தில் ஓம் நமோ அரிஹந்தாணம் என்று உச்சரிக்கப்படுகிறது.கிரேக்க மொழியில் முதல் எழுத்து ‘அ’என்பதை ஓமேன் என்று உச்சரிக்கப்படுகிறது.  பார்ஸி மத நூலான ஜென்தாவஸ்தாவில் ஓங்காரத்தின் பொருள் ஈஸ்வரன் ஆகும். ஆங்கிலத்தில் ஓம் என்பதை OMNI PRESENT, OMNI POTENT, OMNISCIENTஎன்று சொல்கிறார்கள்.ஓம் என்ற ஓசையோ அதன் பொருளோ இல்லாமல் எந்த மதமும் எந்த மொழியும் இல்லை.

யார் நாமத்தை ஜெபிக்க வேண்டும்?

    ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கப்படுகிறது:- மனிதன் மரணிக்கும் தருவாயில் யாரை ஜெபம் செய்ய வேண்டும்? என்று.  ஸ்ரீகிருஷ்ணர் பதிலுரைத்தார்:- ஓங்காரத்தை ஜெபம் செய்ய வேண்டும் என்று. அவர் தன்னுடைய நாமத்தை ஜெபிக்கும்படி கூறவில்லை.  மேலும் ஹரி ஓம், ராம், ராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீகிருஷ்ண, ஹரே ராம ஹரே கிருஷ்ணா, இராதேசியாம்,சீதாராம், விட்டல விட்டல, கோவிந்தா, கோவிந்தா, சிவா, சிவா, முருகா, முருகா, நாராயணா, நாராயணா, அரோகரா, அரோகரா,என்று நாம ஜெபம் சொல்லுமாறு வேதத்தில் எங்கும் உபதேசிக்கப்படவில்லை. சிலர் “ஓம்” என்று முதலில் சொல்லாமல் மற்ற நாமங்களை முதலில் உச்சரித்து விட்டு பிறகு “ஓம்” என்று சொல்கிறார்கள்.  உதாரணமாக “ஹரி ஓம்” என்பது.  இது சரியல்ல.ஏனெனில் வேதங்களில் முதலில் “ஓம்” என்றே உச்சரிக்கப்படுகிறது.பிறகே இறைவனின் குணங்களை குறிக்கும் மற்ற நாமங்கள் வருகின்றன.

    சீக்கிய மதநூலான குரு கிரந்தஸாஹிப்பில் இறைவனின் 37 நாமங்கள் 15025 முறை வருகின்றன.அவற்றில் 230 முறை ஓம் என்ற பிரணவ மந்திரம் வருகிறது.குரு நானக்கர் சொல்கிறார் - ஓங்காரத்தின் சப்தத்தை ஜெபம் செய்யுங்கள், ஓங்காரம் உன்னுடைய குருமுகமாகும்,ஓங்காரத்தில் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று.

பெண்கள் ஓம் உச்சரிக்கலாமா?

     சிலர் இப்பொழுது ஓம் மந்திரத்தை பெண்கள் சொல்லலாமா என்று கேட்கின்றனர்.கடவுளின் நாமம் ஓம்.  ஓம் வேதத்தில் உள்ளது.  வேத மந்திரங்களை கண்டுணர்ந்து உலகுக்கு உபதேசித்த ரிஷி பெண்மணிகள் பலர் உள்ளனர்.  அவர்களின் சில பெயர்கள் வருமாறு:- ரோமஷா, லோபாமுத்ரா, விஷ்வவாரா, அபாலா, கோஷா, அதிதி, இந்த்ராணி, கோதா, சிரத்தா, யமி, சசி முதலானோர்.

காயத்ரீ மந்திரம் பெண்கள் சொல்லலாமா?

  பெண்கள் காயத்ரீ மந்திரமும் சொல்லலாம்.பயம் கொள்ளத் தேவையில்லை.இதனால் ஒரு பாபமும் இல்லை.புண்ணியமே கிடைக்கும்.கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், கௌஸல்யா மாதா அக்னிஹோத்ரம் செய்தார்.  வேத மந்திரம், காயத்ரீ முதலானவை ஓம் என்று உச்சரித்தே செய்தார்.  சீதா பிராட்டியாரும் சந்த்யா வந்தனம் செய்தார்.இது திரேதா யுகத்தின் விஷயம்.அப்பொழுது பௌராணிகரின் சந்த்யா வந்தனம் இல்லை.ஒரே வைதிக சந்த்யா வந்தனம் மட்டுமே இருந்தது.  ஆனால் இன்றோ சில சுயநலம் மற்றும் கபட நெஞ்சமுடைய பண்டிதர்கள் - வித்வான்கள், தங்களுடைய அறியாமையினால் இந்த விதமான பயங்களை உற்பத்தி செய்து விட்டனர்.அதாவது பெண்கள் வேத மந்திரம், காயத்ரீ, ஓம் போன்றவற்றை சொன்னால் அவர்களுக்கு எல்லாவிதமான கெடுதல் உண்டாகும் என்று.எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது.கடவுள் ஆண்களுக்கு மட்டும் உரியவரா என்ன?  பெண்களுக்கு கிடையாதா?இறைவனோ எல்லோருக்கும் உரியவன்.இறைவனின் ஞானமும் எல்லோருக்கும் உரியது.  வேத சம்பந்தமான அனைத்து கர்மகாண்ட சடங்குகளை பெண்கள் தாராளமாகச் செய்யலாம்.  ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் இறைவன் வாய் முதலிய பஞ்ச ஞானேந்திரியங்களை அளித்துள்ளான் எனில் கடவுளின் முழுமுதல் நாமமான ஓங்காரத்தை உச்சரிப்பதில் ஏன் அவர்களுக்கு நாம் (பௌராணிகர்கள்) வஞ்சனை செய்ய வேண்டும்?பௌராணிகர்கள் தடைச்சுவர் போன்று குறுக்கே நின்று தடைகளை விதித்து பெண் குலத்திடம் ஏன் அற்பமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்?தூய்மையயை காரணம் காட்டி இறைவன் நாமம் சொல்வதை தடை செய்ய வேண்டாமே!  குளிக்காமல் ஓம் சொன்னால் மிகப் பெரிய பாபமா வந்து சேரும்?  வெறும் உடலை நீரால் குளித்து சுத்தம் செய்துவிட்டால் மாத்திரம் போதுமா?மனத்தூய்மை வேண்டாமா?

    வேதத்தில் காலை எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன.உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும், தூங்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன. இவை எல்லா மந்திரங்களும் ஓம் சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவன், அவன் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும், எப்பொழுதும் உள்ளவன் ஆனதால் அவனை தியானிப்பதிலும், அவன் நாமத்தை பொருளுடன் அறிந்து உச்சரிப்பதிலும், அவனை எப்பொழுதும் நினைப்பதிலும் என்றும் நன்மையே உண்டாகும்.

ஓம் கொடி பற்றிய சிறு விளக்கம்:-


   ஓம் கொடி வேத காலங்களில் ரிஷி முனிகள், பரமாத்மாவின் இப்பிரம்மாண்ட உலகத்தை கோள வடிவமாகவும் வரைந்து அதன் மத்தியில் கடவுளின் உண்மையான பெயரான ஓம் என்பதை எழுதினர்.அந்த கோள வடிவத்தை சுற்றிலும் பிரகாசம் தருகின்ற சூரிய கதிர்களை வரைந்தனர்.
   மேலும் இந்த கொடியை செந்நிறமான துணியில் வரைந்தனர்.இந்த காவி நிறம் அதிகாலையில் சூரிய உதயத்தின் நிறமாகவும் அக்னியின் ஒரு நிறமாகவும் உள்ளது.ஏனெனில் பரமாத்மாவுக்கு அக்னி என்ற ஒரு பெயரும் உள்ளது.  சூரியனும் ஒரு அக்னி கோளமே.  மேலும் இந்த காவி நிறம் தவத்தின் தியாகத்தின் சின்னமாகும்.  வைதிகப் பண்பாட்டின் ஆதாரம் போகத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.  யோகத்தை அடிப்படையாகக் கொண்டது.  இது கடவுளின் யோகம், தவம், தியாகம் போன்ற குணங்களின் ஆதாரமாக உள்ளது.மனிதன் வாழ்க்கையின் முதல் பகுதியான 25 வயது வரை பிரம்மசரிய ஆஸ்ரமத்தின் (மறை மாணவ பருவம்) மூலம் தவமும், தியாகமும் கடைப்பிடிக்கிறான்.  அடுத்த கட்டமான 25 முதல் 50 வயது வரை இல்லற வாழ்க்கையில், கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மேலும் இருவரும் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் தவமும் தியாகமும் செய்கின்றனர்.அடுத்ததாக வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாசிரமம் (துறவறம்) பற்றி சொல்ல வேண்டியதில்லை.இல்லறத்தில் 25 ஆண்டுகள் லௌகிக சுகம் அனுபவிக்கிறார்கள் என்றாலும் மனிதனின் குறைந்த பட்சமான 100 ஆண்டு ஆயுளில் 75 ஆண்டு வரை தவத்திற்கும் தியாகத்திற்குமாகவே வைதிகப் பண்பாடு அவர்களை ஒழுங்குபடுத்தியுள்ளது.இல்லறத்தார் தனக்குரியவற்றை அனுபவிப்பதும் அளவோடுதான்.இவைகளின் குறியீடாகவே ஓம் கொடி உள்ளது.ஒரு பத்திரிக்கையில் வந்த விஷயம் யாதெனில் ஆப்பிரிக்காவில் ஹஜ் யாத்திரை செல்வோர் தன்னுடன் ஓம் கொடியை எடுத்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

    கொடியின் அளவு:-  3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாகவும், நடுவில் கதிர்களுடன் கூடிய வட்டமும், அதன் நடுவில் ஓம் என்ற எழுத்தும் எழுதப்பட வேண்டும்.  இவ்விதமாக ஓம் கொடி தயாரிக்க வேண்டும்.இந்த ஓம் கொடி ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, சம்பிரதாயம் முதலிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது.மனித நேயத்தின் பெருமையை - தியாகத்தை உணர்த்துகிறது.  எப்படி இறைவனின் நிஜ பெயரான ஓம் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, சம்பிரதாயம் முதலிய எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதோ அதுபோல் தான் இந்த ஓம் என்ற கொடியும்.

 ஓம் கொடியின் மீது வழக்கு:-

     இந்த கொடியானது ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்திற்கு உரியது என்று தௌலதா என்பவர் ஒரு வழக்கை பஞ்சாப் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதியானவர் இந்த ஓம் கொடி ஒரு குறிப்பிட்ட  சம்பிரதாயத்திற்கு உரியதன்று என்று தீர்ப்பு கூறினார்.  எனவே திரு தௌலதா என்பவர் சுப்ரீம் கோர்ட் சென்றார்.  அங்கும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த ஓம் கொடியானது சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்டது என்று தீர்ப்பு வழங்கினர்.

ஓம் சில துளிகள்:-

1. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நாக்கில் தேனால் “ஓம்”என்று ஜாதகர்ம சடங்கில் செய்வதுண்டு.
2. கோபத பிராஹ்மணம்:-"ஆப்ல்ரு வ்யாபௌ", "அவ ரக்ஷணே" என்ற வேர்ச்சொற்களிலிருந்து ஓம் என்ற பொருள் சித்தமாகிறது..ஓங்காரம் எங்கும் நிறைந்த
அனைத்தையும் காக்கும் பரம்பொருள்.
3. மனுஸ்ம்ருதி:- அகாரமும் உகாரமும் மகாரமும் சேர்ந்ததே கணபதியாகிய ஓங்காரம்என அழைக்கிறது.  அதாவது ஓம்சொல்வதாலேயேகடவுளின்தியானம்நடைபெறுகிறது.
4.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், போஸ்டனில் உள்ள டேகானேமருத்துவமனையில் மூளை மற்றும் உடல் சம்பந்தமான மருத்துவத் ஸ்தாபனத்தின் நிறுவனருமான டாக்டர் பேன்ஸன் சொல்கிறார்:-
     "பிரார்த்தனையும் "ஓம்" என்ற சொல்லின் ஓசையும் எயிட்ஸ் மற்றும் இரத்தசோகைபோன்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய சாதனமாக இருக்கிறது"என்று.
 5. சதபதம் பிராஹ்மணம்:-
  கேள்வி: விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் உள்ளவைகள் எங்கிருந்து வந்தன?எல்லாஉயிர்களும் எதனிலிருந்துபரிணமிக்கின்றன-உருவாகின்றன? எதிலிருந்து வாழ்வைப் பெறுகின்றன?
பதில்: அது ஓம்.
    The manifestating word of God is AUM.
6. யஹுதிகளின் அதாவது யூதர்களின் கடவுளின் பெயர் ஜிஹோவா.  அவர் தம்முடைய தூதரான மூஸாவிடம் சொன்னார்:- தன்னுடைய நிஜ பெயர் - "That I am" (ஓம்) என்று.

வேதமோ, “ஓம் க்ரதோ ஸ்மர”, “ஓம் ப்ரதிஷ்ட”, “ஓம் கம் பிரம்ம”- அதாவது “ஓங்காரத்தை நினை; ஓங்காரத்தை ஆத்மாவில் நிலை நிறுத்து; அந்த ஓங்காரமே எங்கும் நிறைந்த பிரம்மம்” என்று ஓங்காரத்தைப் போற்றிப் புகழ்கிறது.

ஓம் சாந்தி:!ஓம் சாந்தி:!!ஓம் சாந்தி:!!!