அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில் -ஒருவந்தூர்,நாமக்கல்

அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில்


மூலவர் : பிடாரி செல்லாண்டியம்மன்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : ஒருவந்தூர்
  மாவட்டம் : நாமக்கல்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  மாசிமகத்தை ஒட்டி தேரோட்டம் உள்பட 15 நாள் திருவிழாவும், மார்கழியில் வேல்திருவிழாவும் நடக்கிறது. இத்திருவிழாவின் போது தினமும் கோயிலின் வேல் மற்றும் பூஜை பொருட்கள் மேளதாளத்துடன் எட்டுப்பட்டி கிராமங்களுக்கும் சென்று பூஜை வாங்கி கொண்டு கோயில் வந்து சேர்கிறது. ஆடி கடைசி வெள்ளியில் 1008 பால் குட அபிஷேக பெருவிழாவும், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜையும் நடக்கிறது.
 
தல சிறப்பு:
 
  இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உப்பு மண் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர் -637 015. நாமக்கல் மாவட்டம்.
 
போன்:
 
  -
 
பொது தகவல்:
 
 
தனக்கு ஒப்பாக எவரும் இல்லாதவன் இறைவன். அப்படி ஒப்பில்லாத ஒருவனாகிய ஈசன் செல்லாண்டியாகவும், அம்மன்செல்லாண்டியம்மனாகவும் இங்கு அருள் புரிகின்றனர்.


பிரகாரத்தில்  மலையாள கருப்பண்ணசாமி, பட்டவன், மதுரை வீரன், சடைச்சியம்மன், பேச்சியம்மன் மற்றும் சப்த கன்னிமார்களும் அருள்பாலிக்கிறார்கள்.



 

பிரார்த்தனை
 
  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
 
நேர்த்திக்கடன்:
 
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
தலபெருமை:
 
  ""சிவனும் பார்வதியும் இணைந்த சக்தியின் சொரூபம் தான் செல்லாண்டியம்மன் என்பது நம்பிக்கை. அம்பிகை வடக்கு நோக்கி நாமக்கல் மற்றும் மோகனூர் பகுதியை பார்த்திருப்பதால் இவ்வூர்கள் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று மக்கள் நம்புகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிக்காக கோயிலை தோண்டும் போது ஒரு நீண்ட கல் கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒரு குதிரையும், ஒரு மரமும், அதன் கீழ் உள்ள லிங்கத்தை பார்வதி தேவி பூஜை செய்வது போலவும் செதுக்கப்பட்டிருந்தது.

சிவனுக்கு ரிஷபமே வாகனம். ஆனால், இங்கு குதிரை வாகனமாக சுவாமி வந்துள்ளது விசேஷ அம்சம்.

பார்வதி பூஜை செய்து வரம் பெற்றதை போன்று வடிக்கப்பட்டிருப்பதால், பெண்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற இந்த சிலையை வணங்கி பயனடைகிறார்கள்.

திருமணத் தடை உள்ள பெண்கள் அம்பிகையை வணங்கி, நலம் பெறுகின்றனர்,'' என்றார்.

 
 தல வரலாறு:
 
 
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை ஊர் மக்கள் அங்கிருந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்து கொண்டிருந்தார்கள். ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதி நின்றது. அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர அருட்சுடராக ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.


தவம், யாகம் என முயற்சி செய்து இறைவனை தேடி அடியார்கள் செல்வதுண்டு. ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் தங்களை தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் மக்கள். அவளுக்கு பச்சை பந்தல் போட்டு பூஜை செய்தனர். இவ்விடத்திலேயே "பிடாரி செல்லாண்டி' என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை.


காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும், பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோயில் உருவானது.


சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 

அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் - சரயு, அயோத்தி,உத்திர பிரதேசம்

அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்


மூலவர் : ரகுநாயகன் (ராமர்)
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : சீதை
  தல விருட்சம் : -
  தீர்த்தம் : சரயு நதி
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : சரயு, அயோத்தி
  மாவட்டம் : பைசாபாத்
  மாநிலம் : உத்திர பிரதேசம்

பாடியவர்கள்:
 
  மங்களாசாசனம்

குலசேகர ஆழ்வார்

சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே சிற்றவை தன் சொல் கொண்ட சீராமா தாலேலோ

-குலசேகராழ்வார்
 
திருவிழா:
 
  ராமநவமி
 
தல சிறப்பு:
 
  ராமனின் ஜெனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் உள்ளன. இவ்வாறு ஒருவரின் ஜாதகம் அமைவது மிகவும் சிரமமானது. எனவே அவரது ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வணங்கினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.இந்தக் கோயிலில் இருந்து 6 கி.மீ., தொலைவில் சரயு நதியில் தனது சகோதரர்களுடன் சங்கமம் ஆன குப்தா படித்துறை உள்ளது. இங்க நீராடுவது புண்ணியம் தரும். இந்த ஆற்றின் கரையில் உள்ள அனுமன் விஸ்வருப வடிவம் கொண்டவராக இருந்தார். இப்போது தலை மட்டுமே தெரிகிறது. குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோர் அயோத்தி பற்றி பாடியுள்ளார்கள்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 98 வது திவ்ய தேசம்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு ராமர் கோயில் அயோத்தி- 224 124 பைசாபாத் மாவட்டம் உத்திரபிரதேச மாநிலம்
 
போன்:
 
  +91-9415039760, +91-9580717014
 
பொது தகவல்:
 
  ஒரு பெண் அழுதால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் ஒரு ஆண் அழுதால் அதற்கு காரணம் ஒரு பெண்ணாகத்தான் இருப்பாள் என்பதை தெளிவாக எடுத்துக்கூறும் கதை ராமாயணம். அதனால் தான் ராமாயணத்தை படித்தாலே புண்ணியம். ஸ்ரீ ராமஜெயம் எழுதினாலே புண்ணியம் என்கிறோம்.
 

பிரார்த்தனை
 
  மனைவிக்கு துரோகம் செய்பவன் அழிந்து போவான் என்பதே ராமாயணம் நமக்கு காட்டும் பாடம். மனைவியை நேசித்தல் ராமனை தினமும் துதிப்பதற்கு ஒப்பாகும். பெண்களும் கோபப்படாமல் சீதாதேவி போல் பொறுமையாக இருக்க வேண்டும்.
 
நேர்த்திக்கடன்:
 
  ராமனுக்கு மிகவும் பிடித்த துளசிமாலையை அணிவித்து அவரை வழிபடலாம். ஸ்ரீராமஜெயம் எழுதுவதோ, ராம நாமத்தை உச்சரிப்பதோ எவ்வளவு பெரிய பாவத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்.
 
தலபெருமை:
 
  ராமன் ஏக பத்தினி விரதன். அனுமான் களங்கமற்ற தூய பிரம்மச்சாரி. இந்த இரண்டையும் நாம் உற்று நோக்க வேண்டும். பிரம்மச்சாரியாக வாழ்பவன் அனுமனைப் போல பிற பெண்களை தாயாக நேசிக்க வேண்டும். சீதாவை அனுமான் தாயாகவே நேசித்தான். இல்லற வாழ்க்கையில் இறங்குபவன் பக்கத்து வீட்டு பெண்ணை நோக்கக்கூடாது. ராவணனுக்கு மண்டோதரி மனைவி ஒருத்தி இருக்கும் போது அவன் அடுத்தவன் மனைவியான சீதா மீது ஆசைப்பட்டான். விளைவு அவன் உயிரே போனது. இதற்கு காரணம் சீதாவும் அல்ல. ராமனின் வீரமும் அல்ல. மண்டோதரியின் மனக்குமுறலே ராவணனை அழித்து விட்டது. நாம் இருக்கும்போது இன்னோருத்தியை தனது கணவர் நாடுகிறாரே என அவள் மனம் எந்த அளவு புண்பட்டிருக்கும். அந்த புண்பட்ட மணம் தன்னை அறியாமல் விட்ட சாபமே ராவணனின் அழிவுக்கு காரணமாயிற்று.
 
 தல வரலாறு:
 
  உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ளது அயோத்தி. சரயு நதிக்கரையில் ராமனுக்கு கோயில் எழுப்பப் பட்டுள்ளது. மனித குல முதல்வரான மனு இவ்வூரை கட்டியாதக் சொல்வர். தேவர்களே இந்நகரை கிருஷ்ணனின் ராம அவதாரத்துக்காக எழுப்பினார் என புராணங்களில் சொல்லப்படுகிறது. மனுவின் வம்சத்தில் வந்த ஹரீஷ் சந்திரா, சாகர், பரகீதர் ஆகியோர் இந்த புண்ணிய பூமியை ஆண்டனர். அதன் பிறகு பகீரதரின் பேரனான தசரதர் ஆட்சிக்கு வந்தார். அவருக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என்னும் முன்று மனைவிகள். இவர்களில் கோசலைக்கு பிறந்தவரே ராமன். ராமாயணம் மறைமுகமாக சுட்டிக் காட்டும் உண்மை இதில் தான் புதைந்து கிடக்கிறது. தசரதர் கோசலையை மட்டும் மணந்திருந்தால் அவள் மூலமாகவே நான்கு புத்திரர்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர் மூன்று பெண்களை திருமணம் செய்து நான்கு மக்களைப் பெற்றார். ஆனால் கைகேயியின் சொல்லைக் கேட்டு வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகி, புத்திர சோகத்தால் தன் உயிரையே விட்டார். இதே போல ராவணனும் இன்னொரு பெண்ணை விரும்பியதால் இறந்தான். அயோத்தி மாநகர் ஆலயத்தில் இன்று ஒரு குறிப்பிட்ட பகுதியில் ராமரை வழிபட எந்தத் தடையும் இல்லை. இங்கு ராமன், ரகுநாயகன் என்ற பெயரில் வீற்றிருக்கும் கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இப்போது சரயு நதிக்கரையில் அம்மாஜி மந்திர் என்ற பெயரில் புதிய தலம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு ரங்கநாதர் சன்னதியும், ராமர் சன்னதியும் உள்ளன. ராமனின் சன்னதியில் சீதாதேவியும், தம்பிகள் மூவரும், அனுமனும், கருடனும் உள்ளனர். இத்தனை பேரையும் ஒரு சேர வழிபடும் இடம் இதுவே.

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் - சிவன்மலை, காங்கேயம்

அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
 
மூலவர் : சுப்ரமணிய சுவாமி
  உற்சவர் : வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர்
  அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
  தல விருட்சம் : தொரட்டி மரம் (ஆண், பெண் மரங்கள் பிணைந்த நிலையிலுள்ளது)
  தீர்த்தம் : காசி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : சிவ ஆகமம்
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : பட்டாலியூர்
  ஊர் : சிவன்மலை, காங்கேயம்
  மாவட்டம் : திருப்பூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  ஆண்டு தோறும் தைப்பூச தேர்த்திருவிழா 16 நாட்கள் சிறப்பாக நடந்து வருகிறது. அதோடு, தமிழ்வருட பிறப்பான சித்திரை கனி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், அடி பதினெட்டு, ஆடி அமாவாசை, ஆடி சஷ்டி, ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஐப்பசி கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம், கார்த்திகை ஜோதி, மார்கழி மாத சிறப்பு பூஜைகள், திருவாதிரை, தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், மற்றும் பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சஷ்டி என ஆண்டு முழுவதும் சிறப்பான திருவிழாக்கள் சிவன் மலையில் நடந்து வருகிறது. தினமும் ஐந்து கால பூஜைகள் நடக்கின்றன. விழாப்பூஜை : காலை 6.00 மணி; காலசந்தி : காலை 9.00 மணி; உச்சி காலம் : மதியம் 12.00; சாயரட்சை மாலை 6.00 மணி; அர்த்தசாமம் இரவு 8.00 மணி.
 
தல சிறப்பு:
 
  சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 5.30 முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலை, காங்கேயம் தாலுகா. திருப்பூர் மாவட்டம்.
 
போன்:
 
  +91 4257- 220680, 220630
 
பொது தகவல்:
 
  கடல் மட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில், குன்றின் மேல் அமைந்துள்ள கோயில். 10,12ம் நுõற்றாண்டிலேயே கோயில் குறித்த செய்திகள் உள்ளன. 496 படிகள் ஏறிச்சென்றால், ராஜகோபுரம், தீபஸ்தம்பம், கொடிமரம், முன் மண்டபம், சுற்று பிரகாரம், மூலவர் என்ற அமைப்பில் உள்ள முழுவதும் கற்களால் கட்டப்பட்ட, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலாகும். மலையில் ஏறி, ராஜ கோபுர மண்டபம், தீபஸ்தம்பத்திற்கு செல்வதற்கு முன்பு, அரசு, வேம்பு மரங்களுக்கு மத்தியில் எழுந்தருளியுள்ள விநாயகர்,  ஞானாம்பிகை உடனமர்ந்த கைலாசநாதர்,  தீபஸ்தம்பம், கன்னி மூல கணபதியும், தண்டபாணி சன்னதி,கொடிமரம், பலி பீடம், சுமூகர், சுதேகர் என்ற துவார பாலகர்கள், மலையை சுற்றிலும், அட்ட துர்க்கை இருப்பதாக கூறப்படுகிறது. ஆலாம்பாடிவனசாட்சி (காட்டம்மை), பாப்பினி அங்காளபரமேஸ்வரி, காங்கேயம் ஆயி அம்மன், வலுப்பூரம்மன், தங்கம்மன், அந்தனுõரம்மன், கரியகாளியம்மன், செல்வநாயகி அம்மன் என எட்டு அம்மன்கள் எழுந்தருளியுள்ளனர். மலையேறும் 18ம் படிக்கு, சத்தியபடி என்ற பெயர் உள்ளது.  முற்காலத்தில் வழக்குகள் இப்படியில் நடந்து, தீர்வு காணப்பட்டுள்ளது. புராணப்படி எனவும் அழைக்கப்படுகிறது. சடைச்சியம்மன் இங்கு குடியிருப்பதாக நம்பிக்கை உள்ளது. அர்த்த மேரு அமைக்கப்பட்டு, அதன் வள்ளியம்மன் திருவடிகள் உள்ளன. மலை படிகளில் ஏறுவதே ஒரு தவமாக கருதப்படுகிறது. காரண மூர்த்தியான சுப்ரமணியர் சன்னதியில் காரண ஆகம விதப்படி நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. இங்கு, சனி பகவான் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்கிறார்; மீதமுள்ள எட்டு கிரகங்களும் சூரியனை பார்த்து அமைந்துள்ளன.கோள்கள் வரிசைப்படியாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,  சனி, குரு, சுக்கிரன் என்ற அடிப்படையில் உள்ளன. முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு, சுக்கிரன், கேது வரிசையாக காட்சியளிக்கின்றன. அதே போல், சனியும், செவ்வாயும் இணைந்த அம்சத்தில் அமர்ந்திருப்பது, இப்பகுதியிலுள்ள பழமையான கோயில்களில் பார்க்க முடியாத அருமையான விசேஷமாகும்.இங்கு, நவக்கிரகங்களை வழிபடுவது, ஒவ்வொரு நவக்கிரக கோயில்களுக்கும் தனித்தனியாக சென்று வழிபடுவதன் பலன் இங்கு ஒரே இடத்தில் கிடைக்கும்.
 

பிரார்த்தனை
 
  வேண்டியவருக்கு வேண்டியதை வழங்கும் பிரார்த்தனை ஸ்தலமாகும். திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குவதால் பக்தர்கள் அதிகமானோர் வருகின்றனர். அதுமட்டுமின்றி இங்குள்ள நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்துனை பிரச்சனைகள்  இருந்தாலும், விடுபடலாம் என்ற ஐதீகம் உள்ளது. சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.
 
நேர்த்திக்கடன்:
 
  இங்கு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, சிவ+அசலம் + பதி = சிவாசலபதி, தீராத காய்ச்சலுக்கு தீர்வு : மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார்.காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பூஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.
 
தலபெருமை:
 
  அனும தீர்த்தம், அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், மங்கள தீர்த்தம், வீர தீர்த்தம், சக்தி தீர்த்தம், பிரமானந்த தீர்த்தம் ஆகிய ஏழு தீர்த்தகங்கள் உள்ளதாகவும், ஆண்டவனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த சடச்சி அம்மன் என்ற பெண், கங்கையின் சிறப்பு அறிந்து, கங்கை  செல்ல வேண்டும் என வேண்டியுள்ளார். முருகன் அவருக்கு, காசி, கங்கை தீர்த்தத்தை உருவாக்கி, காசியை காட்டியதாகவும், இன்றும் நந்தவனமாக உள்ள பகுதியில் கங்கை, காசி தீர்த்தம் உள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவருக்கே முதல் மரியாதை அனைத்து கோவில்களிலும்  விநாயகருக்கு  முதல் பூஜை நடக்கும். இங்கு மூலவரான சுப்ரமணியருக்கே நடக்கிறது. இதற்கு, இங்கு எழுந்தருளியுள்ள விநாயகரே, முருகனை வழிபடுவதாக ஐதீகம் என்கின்றனர்.கருவறையில், மூலவராக வள்ளியம்மை உடனமர் ஸ்ரீ அன்னதான மூர்த்தியாக எழுந்தருளி, வள்ளி மணாளன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். முருகனை நினைத்து வள்ளி இங்கு தவமிருந்து, அறச்சாலை அமைத்து பணி புரிந்ததாகவும்,  வள்ளியறச்சாலை, மருவி வள்ளியரச்சல் ஆனதாகவும், காங்கேய நாட்டில் ஒரு பகுதி வள்ளியறச்சாலையாக இருந்துள்ளது.வள்ளி, தெய்வானை சமேத, சுப்ரமணியர் திருமண கோலமும்,  வள்ளி, தெய்வானைக்கு தனி சன்னதிகளும் உள்ளது.அனைத்து நோய்களும், பிரச்னைகளையும் தீர்த்து வைப்பதாகவும், அரிய வகை மூலிகை செடிகள் உள்ள காட்டை கடந்து செல்வதால் நோய்கள் தீர்வதாகவும், சித்தர்கள்  பலர் தவமிருந்த மலை; இன்றும் பல சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது.

கோவில் சிறப்பு உத்தரவு பெட்டி : சிவன்மலை கோயில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது. முன்னமே  ஆண்டவன் உத்தரவு மூலம் சுவாமி உணர்த்துகிறார். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, குறிப்பால் உணர்த்தி அது சம்மந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு வழங்கி வருகிறது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை பக்தர்கள் கொண்டு வந்தால், மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் பூ  கேட்கின்றனர். அனுமதி கிடைத்தால், ஏற்கெனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. கிணற்றில் தண்ணீர் இறைக்கும் சால்பரி வைத்து பூஜை செய்யப்பட்ட பொழுது, சால்பரிகள் பயன்பாடு குறைந்து, மின் மோட்டார்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. துப்பாக்கி வைத்து பூஜை செய்த போது, சீனா போர், சைக்கிள் வைத்து பூஜை செய்த போது, மொபட், பைக் என வாகனங்களின் பெருக்கம் அதிகரித்தது; தண்ணீர் வைத்து பூஜை செய்த போது, சுனாமி ஏற்பட்டது, மணல் வைத்து பூஜை செய்த போது, மணல் விலை ஏறியது, மண் வைத்து பூஜை செய்த போது ரியல் எஸ்டேட் தொழில் உருவாகி வளர்ந்தது. மஞ்சள், தங்கம், நெல் என பொருட்கள் வைத்து பூஜை செய்த போது, அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது என , ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் மீது ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடந்து வருகிறது.
 
 தல வரலாறு:
 
  கொங்கு நாட்டில், குன்றுகளின் மேல் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பெற்றது சிவன்லை. அருணகிரி நாதரால் பாடல் பெற்றது; புராணங்கள், தமிழ் இலக்கியங்கள், சிவமலை குறவஞ்சி என பழங்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் உறுப்பு நாடுகள் 24ல், காங்கேயநாட்டின் தலைநகராக இருந்தது சிவன்மலை. கங்கையின் புதல்வர் முருகன், காங்கேயன் என்ற சிறப்பு பெற்றதாகவும், கங்கை குல வேளிருக்கு உரியதால் இப்பெயர் பெற்றது, கங்கர்கள் ஆண்டது என பல்வேறு வரலாறுகள் உள்ளது. காங்கேய நாடு கோயில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோயில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என குறிக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோயில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள், 13 கல்வெட்டுகள்  காணப்படுகிறது.

சிவமலை குறவஞ்சியில் சிவன் மலை என பெயர் வந்ததற்கு, வள்ளி நாயகியை முருகன் கவந்து வந்த காரணத்தில், ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து , மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10-13ம் நுõற்றாண்டில், மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டாலி கல்வெட்டுக்களை 1920ம் ஆண்டே, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நுõலை இயற்சிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர்  அமைத்த கோயில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பார்வதியின் பாதங்களில் உள்ள அணி கலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றினர். இதனால், வீரமாபுரம் எனவும் பெயர் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.சிவமலை. சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை. சிவசைலம், சிவநாகம்,சிவகிரி எனவும், புலவர்கள்  தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என பலர் பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. திரிபுர  சம்ஹாரத்தின் போது, சிவபெருமான் வாசுகியைக்கணையாக வைத்து, மேருமலையை வில்லாக வளைத்த போது, மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேகய நாட்டில் விழுந்தது  சிவமலை குன்று. கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்துள்ளது. வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு என பழங்கால இலக்கிய பாடல்களில் குறிப்புள்ளது.முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என்றும் பழங்கால பாடல் குறிப்பிடப்படுகிறது. அதே போல், இங்கு, அரிய வகை கற்கள், நவ ரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவ மணிகள் உற்பத்தி; மணிகளாக செய்யப்பட்டு, பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம்  ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்று பத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. அருணகிரி நாதர் பட்டாலிக்கு வந்து மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. குலோத்துங்க சோழன், விக்கிர சோழன், வீரராஜேந்திர சோழன், அபிமான சோழ ராஜ ராஜ  சோழன் உள்ளிட்டோர் கல்வெட்டுக்கள் உள்ளன.சோழ அரசர்கள் கோவிலுக்கு அதிகளவு கொடை அளித்துள்ளனர். சிலைகள், மண்டபங்கள், விளக்கு வைக்க, சிவராத்திரி கொடை, கிணறு, தோட்டம் என பல குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: சைதன்ய சொரூபமாக இன்றும் சிவ வாக்கிய சித்தர் இங்கு வாழ்ந்து வருவதாகவும், உட்பிரகாரத்தில் குகையில் சிவவாக்கியர் அமர்ந்த நிலையில், வள்ளியோடு சுப்ரமணியர் அருளும் காட்சி உள்ளது. அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோயில் சென்று சூரியனை வழிபடுவதால் சிறப்பும் இங்கு கிடைக்கும். 

அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில் : நடப்பூர்

அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில்



மூலவர் : பெரியநாயகி
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : -
  தல விருட்சம் : வேம்பு
  தீர்த்தம் : சிவக்குளத்து தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : நடப்பூர்
  மாவட்டம் : திருவாரூர்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  ஆடி மாதம், சிவராத்திரி, பவுர்ணமி, சித்திரை விழா மற்றும் வைகாசியில் கஞ்சி வார்த்தல்
 
தல சிறப்பு:
 
  இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு பெரியநாயகி திருக்கோயில் நடப்பூர் மற்றும் அஞ்சல், கங்களாஞ்சேரி வழி, திருவாரூர்-610101.
 
போன்:
 
  +91 9786141303
 
பொது தகவல்:
 
  இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன்,  சப்தகன்னியர்கள், ஆதி மூல ஐயனார் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், முருகன், பூரணை புஷ்பகலாவுடன் ஐயனார், பலிபீடம் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
 

பிரார்த்தனை
 
  திருமணதடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தீராத நோய் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

 
நேர்த்திக்கடன்:
 
  மூலவருக்கு அபிஷேகம் செய்து பொங்கலிட்டும், உயிருடன் கோழி, ஆடு செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
 
தலபெருமை:
 
  சோழர் காலத்தில் கோயில்கள் கட்டும்போது எல்லை தெய்வமாக அமைந்துள்ளது. பலருக்கும் குல தெய்வமாக விளங்குகிறது.

 
 தல வரலாறு:
 
  முற்காலத்தில் வயல்வெளிகளில் திருட்டு அதிகமானதால் அப்பகுதியினர் காவல்தெய்வாக வழிபட்டனர். பிற்காலத்தில் பலருக்கு குலதெய்வமாக விளங்கியது. முதலில் கீற்றுக் கொட்டகையில் இருந்தது  தற்போது புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.
 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு. 

அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில் : வேந்தன்பட்டி

அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில்


மூலவர் : சொக்கலிங்கேஸ்வரர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : மீனாட்சியம்மன்
  தல விருட்சம் : வன்னி மரம்
  தீர்த்தம் : -
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : வேந்தன்பட்டி
  மாவட்டம் : புதுக்கோட்டை
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், ஐப்பசி அன்னாபிஷேகம். சித்ராபவுர்ணமி, வைகாசி விசாகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், தைப்பூசம், பங்குனி உத்திரம். இக்கோயிலில் சிவனுக்குரிய வழக்கமான விழாக்கள் நடக்கின்றன. பிரதோஷம் தான் முக்கியம். சனிப்பிரதோஷம் என்றால் இரட்டிப்பு கூட்டம் வருகிறது.
 
தல சிறப்பு:
 
  வீட்டில் தரையில் நெய் சிறிதளவு கொட்டினாலும் என்னாகும்? சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னும் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்தவேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோயில், வேந்தன்பட்டி - 622 419, புதுக்கோட்டை மாவட்டம்.
 
போன்:
 
  +91-95858 50663
 
பொது தகவல்:
 
  இவ்வூரின் அருகிலுள்ள பரம்புமலையை வள்ளல் பாரி ஆண்டுவந்தார். இங்குள்ள பிரான்மலையிலும் சிவாலயம் ஒன்று உள்ளது.
 

பிரார்த்தனை
 
  இங்குள்ள மீனாட்சியை வழிபட்டு, திருமணமாகாத பெண்கள் திருமணத்தடை நீங்கப் பெறலாம். வறுமை நீங்கி செல்வம் உண்டாகவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நந்தீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர்.

 
நேர்த்திக்கடன்:
 
  நேர்த்திக்கடனாக மீனாட்சிக்கு, மஞ்சள், குங்குமம் காணிக்கை கொடுத்து மாங்கல்ய பாக்கியம் நிலைக்கப் பெறலாம். பிரார்த்தனை நிறைவேறியதும் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டாக வைத்தும், பண நோட்டுகளை மாலையாக கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
 
தலபெருமை:
 
  நெய் நந்தீஸ்வரர்: இந்த நந்தியை "தம்பி நந்தி' என பக்தர்கள் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதப்படுகிறார். தஞ்சாவூர் நந்தி மிகப்பெரிய அளவில் அமர்ந்து பக்தர்களை எப்படி கவர்ந்தாரோ, அதே போல வேந்தன்பட்டி நந்தியும் ஒரு அற்புதம் செய்து பக்தர்களை ஈர்த்துள்ளார்.

இவ்வூரில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பக்தர், நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். அதை, புனிதம் கருதி இங்கிருந்த தீர்த்தக் குளத்திற்குள் வைத்து விட்டார். ஒருசமயம் அவருக்கு கடுமையான வயிற்று வலி உண்டானது. தனக்கு நோய் குணமான சிவனை மானசீகமாக வழிபட்டார். ஒருநாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு கண்டார். நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாததால் தனக்கு வயிற்று வலி உண்டானதாக உணர்ந்த பக்தர், தனக்கு நோய் குணமானால், நந்தியை பிரதிஷ்டை செய்து, நெய் அபிஷேகம் செய்வதாகவும், கோயிலையும் பெரியளவில் திருப்பணி செய்வதாகவும் வேண்டிக் கொண்டார். சில நாட்களிலேயே நோய் குணமானது. எனவே, நந்தியை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். நந்திக்கும் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டார். இதன்பிறகு, நந்திக்கு பிரதானமாக நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.

அதிசய நெய்: இங்கு வரும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற நெய் நந்தீஸ்வரருக்கு, நெய்யபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். ஒரு சமயம் அபிஷேக நெய்யில், கோயிலுக்கு தீபம் ஏற்றினர். அப்போது, நெய் ரத்தம் போல சிவப்பு நிறத்தில் மாறியதாம். எனவே, அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோயிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோயில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுகின்றனர். தற்போது, இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால், இங்கு இவை இன்று வரையிலும் வராதது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம்.

ரிஷப ராசி கோயில்: நந்தீஸ்வரருக்கு ரிஷபம் என்றும் பெயருண்டு. எனவே, ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாகவும் இக்கோயில் திகழ்கிறது. ஜாதகத்திலோ அல்லது அவ்வப்போது நிகழும் கிரகப் பெயர்ச்சிகளாலோ பாதிக்கப்படும் இந்த ராசிக்காரர்கள், நிவர்த்திக்காக இங்கு வணங்குகின்றனர். நந்திக்கு முக்கியத்துவம் உள்ள கோயில் என்பதால், நந்திக்கு அர்ச்சனை செய்யும் வழக்கமும் உள்ளது. கால்நடை வளர்ப்போர், அவை நோயின்றி வாழவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய பொருட்களை விற்பனை செய்வோர் வியாபாரம் செழிக்கவும் இங்கு அதிகளவில் வேண்டிச் செல்கின்றனர். நோயால் அவதிப்படும் கால்நடைகள் குணமாக, நந்திக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பெற்றுச் சென்று அதற்கு புகட்டுகின்றனர். இதனால், அவற்றிற்கு நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை. இங்கு வணங்கி பசு மாடுகளை வாங்குவோர் முதலில் சுரக்கும் பால் மற்றும் முதலில் உருக்கிய நெய்யால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் வெற்றி பெறுவதற்காகவும் இங்கு வேண்டிச் செல்கின்றனர்.

மாட்டுப்பொங்கல் விசேஷம்: நந்தீஸ்வரர் தலையில் இரு கொம்புகளுக்கு நடுவே சக்கரம் உள்ளது விசேஷமான அமைப்பு. இவருக்கு பிரதோஷ பூஜை விசேஷமாக நடக்கும். நல்லெண்ணெய் தவிர பிற அபிஷேகங்களும், இறுதியாக நெய்யால் அபிஷேகமும் நடக்கும். மாட்டுப்பொங்கலன்று நந்தி அருகில் பிரதோஷநாயகரை எழுந்தருளச் செய்து, இருவருக்கும் ஒரே சமயத்தில் விசேஷ அபிஷேகம் நடக்கும். பின், நந்திக்கு பழங்கள், பூக்கள், இனிப்பு பதார்த்தங்கள், பட்சணங்கள், கல்கண்டு உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்வர். பின், பிரதோஷநாயகர் கோயிலுக்குள் புறப்பாடாவார். இவ்வூரில் உள்ள கச்சேரிக்கூடம் என்னுமிடத்தில் ஒரு வேப்ப மரம் உள்ளது. இதில், இயற்கையாகவே நந்தியின் உருவம் தோன்றியிருக்கிறது.

அக்னி காவடி வைபவம்: வைகாசி விசாகத்தை ஒட்டி இங்கு 3 நாள் விழா நடக்கும். விசாகத்தன்று "அக்னி காவடி' தூக்கும் வைபவம் விமரிசையாக நடக்கும். அப்போது, இங்கு வேண்டி பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் காவடி தூக்கிக் கொண்டு, பூக்குழியில் இறங்குவர். நந்தீஸ்வரருக்கு முடிக்காணிக்கை செய்து நேர்த்திக்கடன் செலுத்துவதுமுண்டு. கோயில் எதிரே நந்தி தீர்த்த தெப்பம் உள்ளது. சுவாமிக்கு இடப்புறம் மீனாட்சி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் சூரியன், விநாயகர், வள்ளத தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், நவக்கிரகம், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

 
 தல வரலாறு:
 
  மதுரையில் உறையும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளனர். இத்தலம் பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரார்த்தனை தலமாக இருக்கலாம். இப்பகுதிக்கு சென்ற பாண்டியர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான மீனாட்சி சொக்கநாதரை பிரதோஷ வேளையில் வழிபட உருவாக்கியிருக்கலாம். இத்தல வரலாறு சரிவர கிடைக்கவில்லை. ஆயினும், இது பழமையான கோயில்.

சோழர்களும் இத்தலத்தின் திருப்பணியில் பங்கு கொண்டிருக்க வேண்டும். கொடும்பாளூரில் இருந்து தஞ்சாவூர் கோயிலுக்கு இரண்டு நந்திகள் கொண்டு வரப்பட்டன. இதில் பெரிய நந்தி, தஞ்சையில் வைக்கப்பட்டது. சிறிய நந்தி வேந்தன்பட்டியில் உள்ளது. இரண்டு நந்திகளின் அமைப்பும் ஏறத்தாழ சமநிலையில் உள்ளன. எனவே, இங்கு நந்தி வழிபாடே முக்கியமானதாயிற்று.

கொடும்பாளூர் என்னும் தலத்தில் மூன்று சிவலிங்கங்களுடன் மூவர் கோயில் இருந்தது. அப்பகுதிக்கு போர் தொடுத்து வந்த அந்நியர்கள், அக்கோயிலை சேதப்படுத்தினர். இதனால், கோயில் அழிந்து, சிவலிங்கங்கள் மட்டும் இருந்தது. சிவபக்தர்கள் சிலர் அங்கிருந்த லிங்கங்களையும், நந்தியையும் எடுத்து வந்து வேந்தன்பட்டி, தெக்கூர் மற்றும் புதுப்பட்டி ஆகிய ஊர்களில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். இவ்வூரில் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு "சொக்கலிங்கேஸ்வரர்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: வீட்டில் தரையில் நெய் சிறிதளவு கொட்டினாலும் என்னாகும்? சற்று நேரத்தில் ஈயும், எறும்பும் குவிந்து விடும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டி மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்து கொட்டிக் கிடந்தாலும் அந்த இடத்திற்கு ஈக்களோ, எறும்புகளோ வராது. கோயிலில் உள்ள நெய்க்கிணற்றில் ஈக்கள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. வேந்தன்பட்டியில் கச்சேரிக்கூடம் என்னும் பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்தவேப்பமரத்தில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். 

அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில் : காரைக்குடி

அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில்


மூலவர் : கொப்புடை நாயகி அம்மன்
  உற்சவர் : கொப்புடை நாயகி அம்மன்
  அம்மன்/தாயார் :
  தல விருட்சம் : வில்வமரம்
  தீர்த்தம் : கல்லுகட்டி
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500 வருடங்களுக்குள்
  புராண பெயர் : -
  ஊர் : காரைக்குடி
  மாவட்டம் : சிவகங்கை
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச்செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
 
தல சிறப்பு:
 
  சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் திருக்கோயில், காரைக்குடி - 630 001, சிவகங்கை மாவட்டம்.
 
போன்:
 
  +91 -4565 2438 861, 99428 23907
 

பிரார்த்தனை
 
  கொப்புடையம்மனை வணங்கினால் எல்லாவகை நோய்களையும் தீர்த்து வைக்கிறாள்.

தவிர விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், கல்யாண வரம் வேண்டியும், குழந்தை பாக்கியத்திற்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் பலன் நிச்சயம் என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.

 
நேர்த்திக்கடன்:
 
  அம்மனுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
தலபெருமை:
 
  ஆதிசங்கரர் வழிபட்ட தலம் : ஆதிசங்கரரே வந்து வழிபாடு செய்த காரைக்குடி அம்மனுக்கு கொப்புடையாள் என்று பெயர். கொப்பு என்றால் கிளை என்று பொருள். இவள் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் ஜுவாலைக் கிரீடத்துடன் பஞ்சலோக உற்சவ திருமேனியாக காட்சி தருகிறாள்.
இதில் வலது கை அபயம் அளிக்கும் தோற்றத்துடனும், வலது மேல்கை சூலத்தை ஏந்தியபடியும் இடது மேல் கை பாசமேந்தியபடியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது.

கிழக்கு பார்த்த துர்க்கை :  அம்மன் ஸ்ரீ சக்கரத்தின் மீது இருப்பதால் மிகவும் சக்தி வாய்ந்தவளாக இருக்கிறாள். பொதுவாக காளி, துர்க்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும். ஆனால் இங்கு அம்மன், துர்க்கை அம்சத்துடன் கிழக்கு பார்த்து வீற்றிருக்கிறாள். எனவே இவளை வணங்கினால் கல்வி, செல்வம், வீரம் என மனிதனுக்கு தேவையான மூன்றையுமே வாரி வழங்குவாள். இக்கோயிலில் மற்றுமொரு விசேஷம் என்னவென்றால், காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார்.

கட்டுத்தேர் : இக்கோயிலில் செவ்வாய்ப் பெருந்திருவிழா தேரோட்டம் மிகவும் விசேஷமானது. பனைமரச் சட்டங்களாலான இத்தேர் தையிலான் கொடி கொண்டு இணைத்து முறுக்கேற்றி கட்டப்படும். எட்டாம் நாள் திருவிழா காலையில் அம்மன் தேரில் ஏறி பிற்பகலில் புறப்பாடு நடக்கும். தேர் புறப்பட்டு கண்மாய் வழியாகவே சென்று மாலையில் காட்டம்மன் கோயிலில் எழுந்தருளும். 9ம் நாள் திருநாளில் அங்கிருந்து புறப்பட்டு கோயில் வந்து சேரும். தேர் வரும் பாதை கண்மாய் பகுதியாக இருப்பதாலும், சில காலம் கண்மாயில் நீர் இருந்தால் நீரில் செல்ல நேர்வதாலும் முன்னோர்கள் வயிரத்தேர் செய்யாமல் சட்டத்தேராகவே செய்துள்ளனர். கரடு முரடான பாதையில் கண்மாய்க்குள் செல்லும்போது ஏற்படும் ஆட்டத்தால் பாதிப்பேற்படாமல் இருக்க இயற்கையான தையிலான் கொடி கொண்டு சட்டங்களை இணைத்துக்கட்டுதல் நுட்பமான அறிவுத்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது.

 
 தல வரலாறு:
 
  ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் காரை மரங்கள் அடர்ந்த, செழித்த வனப்பகுதியாக இருந்திருக்கிறது. ஊராக அமைப்பதற்காக இந்த காட்டை அழித்து திருத்தி, மக்கள் குடியேற வசதியாக நகர் உண்டு பண்ணினார்கள். காரை வனப்பகுதியில் ஏற்பட்ட ஊரில் மக்கள் குடியேறியதால் இப்பகுதி காரைக்குடி ஆனது. ஊர்கள் தோறும் சிறப்பான கிராம தேவதை கதை போன்றதே இத்தலத்திற்குரிய கதையும் ஆகும். செஞ்சை காட்டுப்பகுதியில் இக்கோயிலின் உபகோயிலான காட்டம்மன் கோயில் உள்ளது. இந்த காட்டம்மனின் தங்கையே கொப்புடையம்மன்.

கொப்புடையம்மனுக்கு பிள்ளைகள் இல்லை. ஆனால் காட்டம்மனுக்கோ ஏழு பிள்ளைகள். இந்த பிள்ளைகளைப் பார்க்க கொப்புடையம்மன் வரும்போது கொழுக்கட்டை முதலான உணவுப்பண்டங்களை தானே செய்து குழந்தைகளுக்கு கொடுக்க எடுத்து வருவாள். ஆனால் காட்டம்மன் மலடியான தன் தங்கை இப்பிள்ளைகளை பார்க்க கூடாது என்று நினைத்து பிள்ளைகளை ஒளித்து வைப்பாள். இதனை அறிந்த தங்கை கொப்புடையம்மன் ஒளித்து வைத்த பிள்ளைகளை கல்லாக்கிவிட்டு பின்னர் அங்கிருந்து கோபத்தோடு காரைக்குடி வந்து தெய்வமாகிவிட்டாள் என்று இக்கோயில் குறித்து வரலாற்று கதை சொல்லப்படுகிறது.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறார். 

அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில் : சீர்காழி

அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில்


மூலவர் : நாகேஸ்வரமுடையார்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் : புன்னாகவல்லியம்மன்
  தல விருட்சம் : வேம்பு
  தீர்த்தம் : கழுமலநதி
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : சீர்காழி
  மாவட்டம் : நாகப்பட்டினம்
  மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
 
  -
 
திருவிழா:
 
  மகா சிவராத்திரி
 
தல சிறப்பு:
 
  சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள்.
 
திறக்கும் நேரம்:
 
  காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
 
முகவரி:
 
  அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோயில், சீர்காழி, 609 110 நாகப்பட்டினம் மாவட்டம்.
 
போன்:
 
  +91 94437 85862
 
பொது தகவல்:
 
  கருவறையில் இறைவன் நாகேஸ்வரமுடையார், லிங்கத் திருமேனியராக கிழக்கு நோக்கி அருள்பாலிக்க, அம்பாள் புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். கோயிலானது மூன்றுநிலை ராஜகோபுரம், அழகான வேலைப்பாடுகளுடன் மகா மண்டபம், அர்த்தமண்டபம், அதனையடுத்து கருவறை என அமைந்துள்ளது. ராகு, கேதுவுக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள். தென்திசையில் தட்சிணாமூர்த்தியும், கடவுள் வள்ளி- தெய்வானையுடனும், வடமேற்கு திசையில் சூரியன், விநாயகர், பைரவர், தென்கிழக்கு திசையில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி தருகின்றனர். தல விருட்சமான வேம்பின் கீழ் நாகதேவதைகள் வீற்றிருக்கின்றனர்.

 

பிரார்த்தனை
 
  பதினோறாவது வார முடிவில் தோஷ நிவர்த்தி செய்பவர்கள் அன்னதானம் செய்வது உத்தமம். இதனால் ஜனனகால ஜாதகத்தில் ராகுபகவான் பாதகமான இடத்தில் அமைந்ததால் ஏற்படக்கூடிய திருமணத்தடை, களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் முதலிய தோஷங்கள் நீங்கி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!


 
நேர்த்திக்கடன்:
 
  அன்றாட ராகுகால வேளையில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரமான மாலை4.30 மணியளவில் இக்கோயிலில் உள்ள விநாயகர், சுவாமி அம்பாள் ஆகியோரை வணங்கியபின், ராகுபகவானின் சன்னதியில் மாக்கோலமிட்டு தோல்நீக்காத முழு உளுந்து பரப்பி, அதன்மீது நெய்தீபம் ஏற்றி, அறுகம்புல் மற்றும் மந்தாரை மலர்களால் பூஜிக்க வேண்டும். அதோடு ராகுபகவானின் சன்னதியை வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணம்) ஒன்பது முறையும் அடிபிரதட்சணம் செய்து பதினொரு வாரங்கள் வழிபடவேண்டும்.
 
தலபெருமை:
 
  அமிர்தம் உண்டதால் இறவாத்தன்மையும், தேவ மகிமையும் கொண்ட ராகுபகவான் நாகதோஷங்களை நீக்குவது இத்தலத்தின் மகிமை! இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட நந்தவனம் பஞ்சத்தால் வாடிப்போக, அதற்கு நீர் வார்க்கும் பொருட்டு விநாயகர் காக வடிவம் கொண்டு அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை கவிழ்த்துவிட, அந்த நீரானது கழுமல நதியாக பெருகி ஓடியது. மேற்கு திசையில் ஓடும் கழுமல நதிதான் இக்கோயிலின் தீர்த்தம் என்கிறார்கள் புராணம் அறிந்தவர்கள்.

 
 தல வரலாறு:
 
  பாற்கடல் கடையப்பட்டபோது, அதிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தினை உண்பதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே போட்டி எழுந்தது. மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார். தேவர்கள் மோகினி உருவில் வந்திருப்பது மகாவிஷ்ணு என உணர்ந்துகொண்டனர். ஆனால் அசுரர்களோ மோகினியின் அழகைக் கண்டு மதி மயங்கினார்கள். இந்நிலையில் ஸ்வர்பானு என்ற அசுரன் மட்டும் சற்று சுதாரித்தபடி தானும் தேவ வடிவத்தை எடுத்து சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டான். சூரிய, சந்திரர் அதனைச் சுட்டிக்காட்ட, மகாவிஷ்ணு தன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அசுரன் ஸ்வர்பானுவின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலையானது சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடலானது சீர்காழி அருகே உள்ள செம்பாம்பின்குடி என்ற செம்மங்குடியிலும் விழுந்தது. ஆனால் அந்த அசுரன் தேவாமிர்தத்தை உண்டு விட்டதால் அவனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக உருவெடுத்தது. இந்த இரு பாம்புகளும் காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு சிவபெருமானை தியானித்து கடுமையாக தவம்புரியத்தொடங்கின. உள்ளம் குளிர்ந்த சிவபெருமான் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது இரண்டு நாகங்களும் தங்களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரர்களை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் வலிமையையும் வழங்கி அருளுமாறு வேண்டினர். ஆனால் சிவபெருமானோ சிரித்தபடி, சூரிய, சந்திரர்கள் உங்களுக்கு பகைவர்கள்தான். ஆனால் அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே அமரபட்சம்; அமாவாசை, பவுர்ணமி, கிரஹண நாட்களில் நீங்கள் சூரிய, சந்திரர்கள் மீது ஆதிக்கம் செலுத்தலாம் என்றபடி வரம் அளித்தார். உடனே அதே இடத்தில் அசுரத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ராகுவும், பாம்புத்தலையும், அசுர உடலும் கொண்டு கேதுவும் தோன்றினார்கள். அதன்பின்னர் ராகு நாகேஸ்வரமுடையாரை வழிபட்டு கிரக பதவியை அடைந்தார் என்கிறது இத்தலத்தின் வரலாறு.

 
சிறப்பம்சம்:
 
  அதிசயத்தின் அடிப்படையில்: சனிபகவான், ராகுவின் நண்பர் என்பதால், சனீஸ்வரர் தன் மனைவி நீலாதேவியுடன் ராகுவின் சன்னதியில் இருப்பது எங்கும் காணக்கிட்டாத அபூர்வம் என்கிறார்கள்.