கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக?

கர்ப்பக்கிரகத்தை வலம் வருவது எதற்காக?

கோயிலில் கர்ப்பக்கிரகத்தை வலம் வருவதும் கூட எல்லோரும் செய்கிறார்கள் என்று செய்கிறோம். அந்த நேரத்தில் பேசிக் கொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் எந்திரமாய் நடக்கிறோம். அது தவறு.
ஒரு வட்டத்தை மையப்புள்ளி இன்றி நாம் வரைய முடியாது. இறைவன் தான் நம் வாழ்வின் மையம், ஆதாரம் எல்லாம். அந்த இறை மையத்தை ஆதாரமாகக் கொண்டே நாம் இயங்குகின்றோம் என்பதை உணர்த்துவதே இந்த பிரதக்ஷிணம் என்ற வலம் வருதல். வலம் வருவதும் நாம் இடமிருந்து வலமாகத் தான் செய்கிறோம். இப்படி வலம் வருகையில் இறைவன் எப்போதும் நமக்கு வலப்பக்கமாகவே இருக்கிறான். நம் நாட்டில் வலப்பக்கத்தை மங்கலமாகக் கருதுகிறார்கள். ஆங்கிலத்தில் கூட அது right side என்றே அழைக்கப்படுகிறது.
எனவே கர்ப்பக்கிரகத்தை வலம் வருகையில் எல்லாம் வல்ல இறைவன் என்ற மையத்தை வைத்தே நாம் நம் வாழ்வில் இயங்குகிறோம், அவனை நம் இதயத்தின் மையத்தில் வைத்தே அனைத்து எண்ணங்களும் எழ வேண்டும் என்ற பாவனையில் சுறி வந்து பாருங்கள். தொழுது விட்டு வெளியே வரும் போது உங்களுக்குள் அமைதியும் சக்தியும் அதிகரிக்கக் காண்பீர்கள்.
புரிந்து செய்யும் போதே இது போன்ற செயல்கள் புனிதமாகின்றன. புரியாமல் செய்யும் போது இவை வெறும் சம்பிரதாயம் மட்டுமே. புரியாமல் எத்தனை முறை செய்தாலும் அவை ஒரு பலனையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே புரிந்து, உணர்ந்து, பக்தியுடன் செய்து பலன் காணுங்கள்.
*