ப்ரம்மஹத்தி தோஷம்

ப்ரம்மஹத்தி தோஷம் ", பற்றிய பதிவு இது. [ பாரம்பரிய முறை ].


1. ப்ரம்ம ஹத்தி தோஷம்
மிகக்கொடிய தோஷங்களில் ஒன்றாக கருதப்படுவது. திருக்கோவில் ஸ்தலபுராணங்களில் அதிகமாகவும், இதிகாச, புராணங்களில் பரவலாகவும் இதைப்பற்றி எடுத்து சொல்லப்பட்டு, இதன் தாக்கத்தை பற்றி எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் நூல்களில் அறம் என்று சொல்லக்கூடிய தருமநெறி தவறி செய்யக்கூடிய செயல்களுக்கு தண்டனை தரக்கூடியது. ' பொய்மை ' என்பது பஞ்சமாபாதகங்களில் ஒன்று. ' பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்..............', என்ற வகையில் அது மன்னிக்கப்படலாம். என்றாலும் எள்ளளவும், எதற்காகவும், மன்னிக்க இயலாத பாதகச்செயலகளை போன பிறவியில் செய்தோமானால், இப்பிறவியில் உறுதியாக துயரை தந்து வாட்டக்கூடியது.
2. ப்ரம்ம ஹத்தி தோஷ கிரக நிலை
பொதுவாக குரு + சனி சேர்ந்தாலோ, சமசப்தமபாரவை பெற்றாலோ அல்லது சார பரிவர்த்தனை அடைந்தாலோ ' ப்ரம்மஹத்தி தோஷம்', என்ற கணிப்புகள் பரவலாக உள்ளது. இந்த கணிப்பு ஜோதிட சம்பந்த சாஸ்திரப்படி இயற்றப்பட்ட பழம்பாடல் எதுவும் எனக்கு தெரிந்த வரையில் இல்லை. அவ்வாறு ஏதேனும் பாடல் உள்ளதெனில் நமது ஜோதிட நண்பர்கள் தெரிவித்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே என்னைபொறுத்தவரையில் இந்த கணிப்பு பிற்காலத்தில் யாராலோ உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகையால் 'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு', எனும் திருக்குறளுக்கேற்ப இக்கணிப்பை ஆராய்வதில் தவறில்லை என கருதலாம்.
3. கணிப்பு ஆய்வு;
அ} குரு + சனி சேர்ந்தால் ப்ரம்ம ஹத்தி தோஷம்.
இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எவ்வாறெனில், குரு + சனி கூடினால் குருசண்டாள யோகம் [தோஷம்} என கூறப்பட்டுள்ளது. ஆதாரம் லிப்கோ வெளியிட்டுள்ள குடும்பஜாதகம் நூல். இருவகையான தோஷங்களுக்கு ஒரே விதிமுறை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. மேலும் இன்னொரு வகையில் இக்கணிப்பையும் கவனிக்கலாம். குருவும் சனியும் சேர்ந்து ஒரு ராசியில் அதிக பட்சம் ஓராண்டு வரை இருக்கும். எனவே அந்த ஆண்டு முழுவதிலும் பிறந்த அனைவரும் ப்ரம்மஹத்திதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா? என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஆ} குரு + சனி சமசப்தம பார்வை பெறுவது;
ராசிப்படி பார்த்தால் இதுவும் ஒரு வருஷம் நிகழ்க்கூடியது. எனவே நக்ஷத்திர சாரப்படி பார்க்கலாம். ராசிக்கட்டத்தில் சனியை விட குரு வேகமாக நகரக்கூடியவர். 9 பாதங்களை கடக்க 12 மாதங்கள் என்றால் 1 பாதம் கடக்கும் குருவின் காலம் சராசரியாக 1 மாதம் 10 நாட்களாகும். இதில் குருவின் வக்கிர காலங்கள் கணிக்கப்படவில்லை. கணித்தால் நாட்களின் எண்ணிக்கை கூடும். ஆக இந்த 1 மாதம் 10 நாட்களில் பிறக்கும் அனைவருமே பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களா?
இ} இனி சாரபரிவர்த்தனை கணிப்பு;
குரு ராசிக்கட்டத்தை 12 ஆண்டுகளில் சுற்றி வரும் போது, சனி ஏறக்குறைய 5 ராசிக்கட்டங்களை கடக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் 43 நக்ஷத்திர பாதங்களை கடக்கிறார். இதில் குறைந்த பட்சம் 4 பாதங்களையும், அதிகபட்சம் 9 பாதங்களையும் கடக்கும் போது குருவும் சனியும் சாரபரிவர்த்தனை பெற முடியும். குறைந்தபட்சம் 4 பாதங்களை கடக்கும் காலம் 1 வருஷம் 3 நாட்கள். 9 பாதங்களை கடக்கும் காலம் 2 வருஷம் 6 மாதங்கள். ஆக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்காலகட்டங்களில் பிறப்பவர்கள் அனைவரும் ப்ரம்மஹத்தி தோஷத்துடன் பிறப்பார்கள் என்பது நம்பவியலவில்லை. எனவே ப்ரம்மஹத்திதோஷ ஜாதகங்களை தீர்மானிக்கும் கிரகனிலைகளை இன்னும் நுட்பமாக கணித்துப்பார்க்கலாம் எனத்தோன்றுகிறது.
4. சனி மேஷத்தில் நீசம் பெறுவது
27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒரு முறை 2 வருஷம் 6 மாதகாலம். அதாவது சனி கெட்டிருக்க வேண்டும். வேறு எந்த வகையிலும் யோகம் தராத நிலையில் இருக்க வேண்டும். வக்கிரம், அஸ்தங்கதம், பரிவர்த்தனை அடைந்தால் சனியின் நீசத்தன்மை மாறிவிடும். இந்த சனியுடன் குரு மேஷத்தில் இருப்பது ஒரு வருஷ காலம். ஆக இக்கிரகனிலையை ஏற்றுக்கொள்வோமானால் ப்ரம்மஹத்திதோஷத்துடன் பிறப்பவர்கள் 27 வருஷம் 6 மாதங்களுக்கு ஒருமுறை பிறக்கிறார்கள். இதிலும் சில விதி விலக்குகள் இடம் பெறுகின்றன. சந்திரனும், செவ்வாயும் இடமாற்றம் மேற்கொள்ளும்போது சனி நீசபங்கம் அடைந்து நல்ல யோகம் தருவார் என்பதால் அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் இருக்காது. யோகத்தை தரும் நிலையில் இருக்கக்கூடிய ஒரு கிரகம் தோஷத்தை செய்யாது. என்பதே இதற்கு காரணம்.. மேலும் சனியின் வக்கிரகாலம் ஏறத்தாழ 3 மாத காலம். இக்காலகட்டத்தில் நீசசனி கெடுபலனை விலக்கிக்கொள்வார் என்பதாலும் அக்காலகட்டத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது. நீசசனி வக்கிரம் பெற்றால் கெடுபலன் விலகும் என்பது பலரது கருத்தாகவும், என் சொந்த அனுபவமாகவும் உள்ளது. மேலும் சனிக்கு அஸ்தங்கம் ஏற்படுவதுண்டு. இக்காலகட்டத்தில் சூரியனின் ஆளுமையால் சனியின் கெடுபலன் மாற்றப் படலாம்.. இக்காலத்தில் பிறப்பவர்களுக்கும் ப்ரம்மஹத்திதோஷம் இருக்காது என்றும் கொள்ளலாம். மேலும் குருவும் சனியும் ஒரே நக்ஷத்திர பாதத்தில் இருக்க வேண்டும். துல்லியமாக சொன்னால், குருவும் சனியும் 3.33 பாகைக்குள் இணைய வேண்டும். ஆக ப்ரம்மஹத்திதோஷம் இவ்வளவு விதிகளையும் கடந்து ஜாதகரை அடைய வேண்டியுள்ளது.
5. தீர்வு.
ப்ரம்மஹத்திதோஷம் ஜாதகரை தாக்கும் காலகட்டமாக குருதசை, சனிபுக்தி காலமாகவும், சனிதசை, குருபுக்தி காலமாக கொள்ளலாம். சிலரது வாழ்க்கையில் குருதசை, சனிதசை ஆகியன வராமலே போகலாம். . தோஷம் விலகவேண்டும் அவ்வளவுதானே என அப்போதைக்கென்ன, இப்போதே செய்துவிடலாம் என கொண்டு ஜாதகதோஷ பரிகாரவழிபாடுகளை நம் விருப்பத்திற்கு வளைத்துக்கொள்வது மிகத்தவறாகும். பரிகாரவழிபாடுகளின் தத்துவமே செய்த பாவங்களுக்கு மனம் திருந்தி மன்னிப்பை இறைவனிடம் கோருவது என்பதாகும். இதை நாம் உணராமல் போனோமானால் இந்து தர்ம வழிபாடுகளை வகுத்து தந்த நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். எனவே ஜாதகர் காலமறிந்து தோஷபரிகாரம் மேற்கொள்வது சிறந்த வழியாகும். இவைகள் மட்டுமல்லாமல், ஜாதகப்படி தோஷபரிகாரம் செல்லுபடியாகுமா? என்று ஆராய்வதும் முக்கியம்.
7. வேண்டுகோள்.
எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற திருக்குறள் கருத்து எனது இப்பதிவுக்கும் பொருந்தக்கூடியதே. எனவே தயவுசெய்து என் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதை விட இன்னும் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ளுதல் நன்றாகும். தவறு இருப்பின் தள்ளுபடி செய்வதுடன், உங்கள் கருத்தையும் கூறவேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.