வேதங்கள்

வேதங்கள்

வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும்.
வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.
சொற்பிறப்பியல்
இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.
வேதங்களின் வகைகள்
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்:
ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்
என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர்.
வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு.
அவையானவை:
சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்)
பிரமாணம் எனப்ப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள்
ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள்
உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனபப்டும்.
வரலாறு
வேதங்களில் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின் போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் வேத மொழி என்னும் மொழியில் ஆக்கப்பட்டுளது. இம்மொழி சமசுக்கிருத மொழியின் முன்னோடி. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும்[மேற்கோள் தேவை] எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும்.
இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராம்மணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது.
முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.
வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது.
ரிக் வேதம்
இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது[2]. இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது. மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல் , பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன. மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன. ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.
பிந்தைய வேதம்
பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன. பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. முந்தைய வேதகாலங்களில் கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர்.
யசுர் வேதம்
இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும்.
சாம வேதம்
இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது.
அதர்வண வேதம்
அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும்.
வேத இலக்கியங்கள்
நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன.