மனித தர்மம் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?

மனித தர்மம் பற்றி சாஸ்திரங்கள் என்ன சொல்கின்றன?
சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்


நித்யம் அன்னதானம் பண்ணவேண்டும்; அதிதி போஜனம். அதை ‘ஆதித்யம்’ என்று பெருமையோடு சொல்கிறது ஸனா தனம். வீடு ஏறி வந்தவன் அதிதி (ஸர்வத்ர அப்யாகதோ அதிதி:). தினமும் அவனுக்கு அன்னம் அளித்துப் பெருமைப்படுத்த வேண்டும். அதிதி வரவேற்பில் அன்னம் இடம்பெற வேண்டும் (விருந்தோம்பல்).
பஞ்சாயதன பூஜை செய்து தெய்வங்களுக்கு அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும் (தேவதர்ச்சனம்); அக்னி வழிபாட்டில் (சமிதா தானம்: ஔபாசனம்) தேவர்களுக்கு உணவளிக்க வேண்டும்; விலங்கினம் மற்றும் பறவையினங்களுக்கும் உணவளிக்க வேண்டும்; பகலில் காகத்துக்கும், இரவில் நாய்க்கும் உணவு அளிக்க வேண்டும் (யேபூதா: ப்ரசரந்தி... பலிமிச் சந்தோ...); மழை பொழிந்து, பயிர் வளம் பெற்று, அத்தனை உயிரினங்களுக்கும் பசியாற உணவு கிடைக்கவேண்டும்; வேள்வி வாயிலாக நாட்டில் பயிர் செழிக்க உதவ வேண்டும் (அக்ளெளப்ராஸ் தாஹுதி: ஸம்யக்...).
உணவைத் துறந்து, ஏகாக்ரதையோடு மனதில் கடவுளை நிறுத்தி உபவாசம் இருக்கவேண்டும். ‘உப’ - கடவுள் சந்நிதியில் ‘வாசம்’ - குடியிருக்க வேண்டும். எல்லா அலுவல்களில் இருந்தும் விடுபட்டு, மனதில் ஈசனை நினைத்து உருக வேண்டும். இங்ஙனம் அறத்தை அக்கறையுடன் நடைமுறைப்படுத்துபவன் கணவன். அவனது செயல்பாட்டுக்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து மனைவி அவனைப் பெருமைப்படுத்தவேண்டும்.
நான்காவது புருஷார்த்தம் அதாவது வீடுபேறு (மோக்ஷம்) நமது இலக்கு. வாழ்க்கைப் பயணம் முற்றுப் பெறுவது மோக்ஷத்தில். துயரம் தொடாத மகிழ்ச்சியில் ஆழ்ந்து களிப்பது என்று சொல்ல லாம் (ஆத்யந்திக துக்கநிவிருத்தி) - வேதப் பொருளான ஈசனில் இரண்டறக் கலப்பது (அஹம்ப்ரம்மாஸ்மி). வேதாந்தத்தை (உப நிடதத்தை) உணர்ந்தவன் ப்ரம்மத்தை உணர்வான். எதை உணர்ந் தால் எல்லாம் உணர்ந்தவனாக மாறுகிறானோ, அது ப்ரம்மம். அதை வேதாந்தம் உணரவைப்பதால், வேதாந்தவித்து ஆகிறான்.
பிறப்பின் முழுமையை எட்டியவன்!
ஆயிரம் பிறைகளைப் பார்த்தவன். தனது நாலாவது தலைமுறை யைப் பார்க்கிறான். தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள் ஆகியோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முடித்துக்கொண்டு, வீடுபேற்றை எட்ட முனைகிறான் (ரிணானி த்ரீணி அபாக்ருத்ய மனோமோ ஷேநிவேசயேத்). புத்திரன் - மகன், பௌத்திரன் - பேரன், ப்ரபௌத் திரன் - பேரனின் மகன்; அதாவது, கொள்ளுப் பேரன்... அவனுக்கு ‘நப்தா’ என்ற சிறப்புப் பெயர் உண்டு. நப்தாவைக் கண்ணுற்றவன், பிறப்பின் முழுமையை எட்டியவன். எனவே, ஆயிரம் பிறை கண்டவன் பெருமைப்படுத்தப்படுகிறான்.
உலக இயக்கத்துக்கு ஆதாரமான சூரியனையும், சந்திரனையும் வழிபடுகிறான் (ஸந்தியாவந்தனம் ஔபாசனம், சந்திரதர்சனம்). அதிகாலையில் நீராடி, ஸந்தியா காலத்தில் இறைவனை வணங்கி, ஔபாசனம் மேற்கொண்டு, வேதம் ஓதி, ரிஷிகள், தேவர்கள் மற்றும் முன்னோரை வழிபட்டு (ப்ரம்மயஞ்ஜம்), அதிதிக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உணவளித்து, கடமைகளைச் சரிவர நிறைவேற்றுகிறான். இதைக் கண்ணுறும் அவனுடைய மனைவி, அவனுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து, அவளும் அறத்தில் இணைகிறாள் (பதிவ்ரதா). அறம், மனைவியின் ஒத்துழைப்பில் முழுமை பெறவேண்டும். கணவனிடம் அடைக்கலம் ஆவதன் நோக்கம், அறத்தில் இணைந்து வீடுபேறு பெறுவதாகும். ஆண்டவன் அளித்த ஆயுள், அவனுக்கு ஆயிரம் பிறையை எட்ட உதவியது. அறம் அறுபடாமல் தொடர்ந்தது. இதை உணர்ந்த தேவர்கள், ரிஷிகள், வேதங்கள், நதிகள் அத்தனைப்பேரும் அபிஷேகம் வாயிலாக அவனைப் போற்றிச் சிறப்பிக்கிறார்கள். அதையே சதாபிஷேகம் என்கிறோம்.
பரம்பொருளை மகிழ்விக்கும் அபிஷேகம்!
‘அறம் வாட்டமுற்று அதர்மம் தலை தூக்கும்போது, நான் தோன்றி அறத்துக்குப் பாதுகாப்பு அளிப்பேன்’ என்று ஸ்ரீமந் நாராயணன் தனது கடமையை வெளியிடுவார் (யதாயதாஹிதர்மஸ்ய...). அறத்துக்கு ஆதாரம் வேதம் (வேதோகிலோ தர்ம மூலம்). வேதம் ஓதுபவர்கள் வேதத்தைப் புரிந்துகொண்டு, அது சுட்டிக்காட்டும் பொது அறத்தை நடைமுறைப்படுத்துவர். வேதம் ஓதும் பரம்பரை வேதத்தை
ஓதிக்கொண்டிருக்கும்; அது தவமாக மாறிவிடும். (ஸ்வாத்யாய ப்ரவசனே ஏவேதி நாகோ மௌத்கல்ய; தத்திதப; தத்திதப;). வேதம் சொன்ன கடமைகளைத் தினமும் நடைமுறைப்படுத்துவார்கள் (ஷட்கர்மாணிதினேதினே). அப்போது, வேதம் பசுமையோடு வாட்டமின்றி மிளிரும்; ஸ்ரீமந் நாராயணனும் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்பொருட்டு, அடிக்கடி அவதரிக்க வேண்டியிருக்காது.
வேதம் ஓதுபவர்களின் மறைமுக ஒத்துழைப்பில், தமது கடமைகள் தானாகவே நிறைவேறிவிடுவதால் மகிழும் ஸ்ரீமந் நாராயணன், பிரம்மனின் துணையோடு அவனுக்கு அபிஷேகம் செய்து மகிழ்விக் கிறான். அவன் நீராடிய நதிகள், அவனது பணிவிடையை ஏற்ற நவகிரகங்கள், அவன் காப்பாற்றிய நான்கு வேதங்கள், அவனோடு இணைந்திருந்த காலங்கள், திசைகள், தேவர்கள், ரிஷிகள் அத்தனை பேரும் அறங்காவலனின் (கடவுள்) அபிஷேகத்தில் இணைந்து, ஆயிரம் பிறை கண்டவனைப் போற்றுகிறார்கள் (ஸுராஸ்த்வாம் அபிஷின் சந்துப்ரம்ம விஷ்ணுமஹேச்வரா:...).
ஆறு வழிகளில் அறத்தின் செயல்பாடு
தினமும் ஆறு வழிகளில் அறம் செயல்படும் (ஸ்னானம் ஸந்த்யா ஜபோ ஹோம: ஸ்வாத்யாய; தேவதார்வனம்...).
அன்னதானம்: ‘நான்கு சுவர்களுக்கு நடுவில் தனியாக உண்பவன்
பாவத்தை உண்ணுகிறான்’ என்கிறது வேதம் (கேவலாகோபவதி கேவலாதி). புழு பூச்சி முதல் பிரம்மன் வரையிலான ஜீவராசிகளுக்கு உணவளித்த பிறகே உண்ண வேண்டும் என்கிறது ஸனாதனம்
(ஆப்ரம்மகீடபர் யந்தானாம்...). தனது உணவுக்காக மட்டுமே சமைப்பவனின் சமையல் வீண் என்கிறது சாஸ்திரம் (விருதாபாக: ஸஉச்யதெ). ஆதித்யம், வைச்வதேவம், தேவதார்ச்சனம் ஆகிய மூன்றின் மூலம் அத்தனை ஜீவராசிகளின் பிரதிநிதிகளுக்கு உணவு அளித்துவிடுவான். ஆகவே, அவன் நித்யான்னதாதாவாக மாறிவிடுவான்.
வேள்வி: உலகின் செழிப்புக்காக வேதம் ஓதுபவன் வேள்வியை ஏற்பான். பிறக்கும்போது ப்ராம்மணன், அறத்தைச் செயல்படுத்த பூணூலை ஏற்கும்போது த்விஜன், வேதம் கற்று உணர்ந்தவன் விப்ரன், வேள்வியை ஏற்றவன் ச்ரோத்ரியன் என்று சொல்லும். பயிர் வளம் செழிக்க வேள்வியை ஏற்பான் (காரீரேஷ்டி). அறத்தை அறுபடாமல் காப்பாற்ற, வாரிசுகளைத் தோற்றுவிக்க முனைந்து செயல்படுவான் (புத்ரகாமேஷ்டி). நித்யம் அக்னி வழிபாட்டில் இணைந்து (அக்னிஹோத்ரம்) வேள்வி செய்யத் தயார் நிலையில் இருப்பான். இவன் தருணாக்னிஹோத்ரியாக மாறிவிடுவான்.
பதிவ்ரதா: வேள்வியில் கணவனோடு இணைந்தவள் ‘பத்னி’ என்ற தகுதி பெறுகிறாள் (பத்யுர்னோயஞ்ஜஸம்யோகே). திருமணத்தில் இணைந்து, குழந்தைச் செல்வம் பெற்று, அதன் பிறகு இளமைப் பருவத்தில் வேள்வியில் ஈடுபடவேண்டும் என்று அறம் எச்சரிக்கும். (ஜாதபுத்ர: கிருஷ்ணகேசீ அக்னீனாததீத). வேள்விக்குப் பத்னி வேண்டும் (பத்னியை வானுமதம் நிர்வபதி...). கணவனின் வேள்வி தீஷையில் (விருதம்) மனைவி இணைந்துவிடுவதால், அவள் பதிவிரதை ஆகிறாள்.
உபவாசம்: அறத்தை நடைமுறைப்படுத்த உடல் ஆரோக்கியம் வேண்டும் (சரீரமாத்யம் கலுதர்மசாதனம்). அதற்காக உபவாசத்தை ஏற்கிறான். உபவாசத்தின் மூலம் அவனது உடல் ஆரோக்கியத்தை அடையும். உள்ளம் தெளிவை எட்டிவிடும். உண்ணாமை (அனசனம்),
உறங்காமை (இரவில் ஜாகரணம்), கடவுளை மனதில் இருத்தி நிரந்தர மாக தியானத்தில் மூழ்குவது (உபவாசம்) ஆகியன 8 வயதிலிருந்து 90 வயது வரை அத்தனைபேருக்கும் பொதுவான அறம். உபவாசத்தில் ஈடுபட்டவன் மாஸோபவாசியாக மாறுவான். அனுதினமும் 6 அறங் களை நிறைவேற்ற இந்த உபவாசம் ஒத்துழைக்கும். அவனுக்கு பிணி தோன்றாமல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும்.
ஏகாதசியில் உபவாசம் ஏற்று ஸ்ரீமந் நாராயணனை வழிபடச் சொல்கிறது சாஸ்திரம்.
உணர்ந்து உய்வடைதல்: நாம் செய்த செயல்பாடுகளில் பலனை அனுபவித்துதான் அழிக்கவேண்டும் (அவச்யமனுபோக்தவ்யம் க்ருதம் கர்மசுபாசுபம்). முற்பிறவியில் சேமித்த செயல்பாடு - ஸஞ்சித கர்மா. அந்தச் செயல்பாட்டின் பலனை அனுபவிக்கும் கர்மா - ப்ராரப்தம்; இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் கர்மா இது. வருங்காலத்தில் பலன் அளிக்கக் காத்திருக்கும் - ஆகாமி. இந்த மூன்றும் ஒட்டுமொத்தமாகக் கரைந்து மறையாத வரையிலும், பிறந்து இறந்துகொண்டே இருக்கவேண்டியது வரும். இப்படியான பிறவித் தொடர் அகல, கர்மாவைத் துறக்கவேண்டும். கர்மம் ஜடம். அது மோக்ஷத்தை அளிக்காது. ப்ரம்மம் சைதன்யம். அது மோக்ஷத்தை அளிக்கும் (ஆத்யந்திகதுகக் நிவிருத்தி). கடவுள் கர்ம ஸ்வரூபியாகவும் பிரம்ம ஸ்வரூபியாகவும் இருப்பார் (கர்ம ப்ரம்மஸ்வரூபிணே).
ப்ரம்ம ஸ்வரூபத்தை அனுசந்தானம் செய்தால் மோக்ஷம் கிட்டி விடும்; மறுபிறவி இருக்காது (அபவர்கரூபாய). ‘ஆன்ம சிந்தனைக்கு உகந்த உபநிடதப் பகுதிகளை ஆராய்ந்து, ப்ரம்மமாக மாறிவிடு’ என்று வேதம் அறிவுறுத்தும். அப்போது வேதத்தின் அந்தத்தை (உபநிடத
விளக்கத்தை) அறிந்தவனாக ஆகவேண்டும். அவனே வேதாந்தவித்!
ஆயிரம் பிறை தரிசனம்: தினமும் மாத்யான்ன வேளையில் சூரியனைப் பார்த்து வணங்குவான் (ஜ்யோக்ச ஸுர்யம் த்ருசே). மூன்றாம் பிறையில் சந்திரனையும் பார்ப்பான். ‘சூரியனோடு மறைந்து
வெளிவந்த சந்திரனைப் பார்த்து வணங்க வேண்டும்’ என்கிறது அறம். அவன் ஆறு பருவ காலங்களுக்கு ஆதாரமாகி, நம்மை மகிழ்விக்கிறான் (சந்திரமாஷட்ஹோதா ஸரிதூன் கல்பயாதி). ஆயிரம் தடவை சந்திர தரிசனம் பெற்றவன் சந்திர ஸஹஸ்ரதர்சியாக மாறுகிறான். நீண்ட ஆயுள் இருப்பவனுக்கு அது ஈடேறும். நீண்ட ஆயுளை எட்டியவன், தனக்கு அதை அளித்த பிரம்மனை வழிபடுகிறான். காலாகாலத்தில் அந்தந்த கடமைகளை நிறைவேற்றுபவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டும் வேளையில், அவர்களில் சிலருக்கு தனது நாலாவது தலைமுறையைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்துவிடும். அவர்கள், ப்ரபௌத்ர ஜனன சாந்தியோடு இணைந்து, கனகாபிஷேகத்தையும் பெற்று மகிழ்வார்கள்.
எல்லோரும் ஏற்கலாம் சதாபிஷேகத்தை!
வேதம் ஓதும் பரம்பரையில் பிறந்து, வேதம் கற்பதைத் தவறவிட்டு,
பிறப்பில் ஒட்டிக்கொண்ட மூன்று கடமைகளை (ஜாயமானோவை ப்ராம்மண: த்ரிபி: ரிஹவாஜாயதெ ப்ரம்ம சர்யேணர் ஷாப்ய: யஞேஜனதேவேப்ய: ப்ரஜயாபித்ருப்ய:) மறந்து, பிறப்பின் தகுதியைத் தக்கவைக்க முடியாமல், இடது தோளில் பூணூலுடன் மட்டும் இருப்பவர்களும் இந்தச் சதாபிஷேகத்தை ஏற்கலாம். பெருங்காயச் சொப்பில் பெருங்காயம் மறைந்தாலும், வாசனை தொடரும். வேதம் ஓதுபவனின் ஜீவாணுக்கள் அவனில் இருப்பதால், அவனும் இதில் நிச்சயமாக ஈடுபடவேண்டும். அவனது வாரிசுகள் அறத்தை அறிந்து தெளிவுபெற்று புத்துயிர் பெற்று விளங்க வாய்ப்பு உண்டு. அறியாமையில் சிக்கி அறம் அலட்சியப்படுத்தப்பட்டாலும், அடுத்த தலைமுறைக்கு அறத்தை ஊக்குவித்து உதவ, அவர்களும் இதில் ஈடுபடவேண்டும்.
ப்ராம்மண்யம் அழியா சொத்து. நீறுபூத்த நெருப்பு போல் உறங்கிக் கிடக்கும். அனுஷ்டானங்களால் சிறுகச் சிறுக ஊதி ஊதி வளர்த்து விடலாம். அப்படி வளர்த்தால், பிரகாசம் ஏற்பட்டு, அதன் மூலம் அறம் செழிக்கும். தாழ்வு மனப்பான்மையில் விரக்தி அடையாமல் உற்சாகமாக அதை நடைமுறைப்படுத்தி, அறம் அறுபடாமல் காப்பாற்றவேண்டும். இது, வேதம் ஓதுபவரின் கடமை. கடமையை ஆற்றிய பிறகே உரிமையை எதிர்பார்க்க வேண்டும். உரிமை எப்படி ஒருவனது பிறப்புரிமையோ, கடமையும் அப்படித்தான். இரண்டில் ஒன்றை மட்டும் பிரிக்க முடியாது.
மனித இனம் ஒன்றே!
பண்டைய நாளில், நான்கு இனமும் தங்களது தகுதிக்கு உகந்த வகையில் இணைந்து, பொது அறத்தைச் செழிப்பாக்கி, நாட்டை அமைதிப் பூங்காவாக விளங்கவைத்தனர். வேள்வியை நடைமுறைப் படுத்துபவன் வேதம் ஓதுபவன். அதைக் காபந்து செய்பவன் அரசன். தேவையான பொருளை ஈட்டி அளிப்பவன் வணிகன். உழைத்து உரமூட்டுபவன் உழைப்பாளி. இவர்கள் நான்குபேரின் இணைப்பில் வேள்வி முழுமை பெறும். வேள்விக்குத் தேவையான மண்பாண்டங் களும், வேட்டி-சேலைகளும், தங்கம், வெள்ளி போன்றவையும், தாவரங்களும் மற்றவர்கள் பங்கில் முற்றுப் பெறும். நான்கு இனமும் ஒன்றோடு ஒன்று இணைந்தாலும், பிறக்கும் குழந்தைகள் அத்தனையும் மனித இனம்தான். குதிரை குதிரையையே ஈன்றெடுக்கும்; பசுவை ஈன்று எடுக்காது. பசு பசுவை ஈன்றெடுக்கும்; குதிரையை ஈன்று எடுக்காது. அங்கு ஜாதி பொருந்தும். ஸமானமான இனத்தை ஈன்றெடுப்பதால், அதை ‘ஜாதி’ என்று சொல்லலாம்.
இங்கு, நான்கு இனமும் ஸமானமான இனத்தை (மனித இனத்தை) ஈன்று எடுக்கிறது என்பதால், மனித இனம் ஒன்றுதான் என்று சாஸ்திரம் சொல்லும் (ஸமானப்ரஸவாத்மிகாஜாதி:). பிற்பாடு வந்த சிந்தனையாளர்கள், ஒன்றாக இருந்த மனித இனத்தை ஜாதியாக முத்திரை குத்தி, அப்பாவி மக்களின் மனதில் பாகுபாட்டைப் பதிய வைத்தது, விபரீத விளைவுக்கு வித்திட்டது. நான்கு இனமாக இருந்த மனித இனம், சுதந்திரத்துக்குப் பிறகு நானூறு ஜாதிகளாக வளர்ந்தோங்க வைத்துவிட்டது. தவறான புதுச் சிந்தனையின் பக்கவிளைவு இது.
எல்லோருக்கும் எல்லாமும் உண்டு!
அறத்தை நடைமுறைப்படுத்துபவன் மனிதன். நீடித்த ஆயுளை எட்டிய அத்தனை மனிதருக்கும் சதாபிஷேகம், கனகாபிஷேகம், விருந்தோம்பல், பூஜை-புனஸ்காரங்கள் எல்லாமும் உண்டு. பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரிலும் நான்காவது தலைமுறையை எட்டும் அன்பர்கள் உண்டு.
காலாகாலத்தில் திருமணம், மகப்பேறு, காதணி விழா, பிறந்த நாள் விழா, இறந்த நாள் சடங்கு, அறுபதாம் கல்யாணம், பீமரத சாந்தி, தேவதார்ச்சனம் (கிராமக் கோயில்களில் பூஜாரியாகச் செயல்பட்டு
கடவுள் வழிபாட்டை நிறைவேற்றுவதுண்டு), நீராடல், நெற்றித்திலகம் ஆகிய அனைத்தும் எல்லோருக்கும் உண்டு. உடல் அமைப்பிலும், வேஷத்திலும், கலாசாரத்திலும் ஒன்றுதான்! ஆக, ஆயிரம் பிறையைச் சந்தித்த அத்தனைபேருக்கும் சதாபிஷேகம் உண்டு. இதில் இனபேதம் இருக்க இடமில்லை. பரிணாம வளர்ச்சியில் ஏற்படும் தகுதி அத்தனை மனிதர்களிலும் தென்படும்.
வணக்கத்துக்கு உரிய மனித இனம்
‘தினமும் அன்னதானம் அளிப்பவன், வேள்வியில் இறங்கி அறத்துக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பவன், உடல் ஆரோக்கி யத்தைப் பேண உபவாசம் இருப்பவன், அறத்தில் இறங்கிய கணவ னுக்கு ஆதரவு அளிப்பவள், சிந்தனை வளம் பெற்று உள்ளம் உயர்ந்து, உயர்ந்தவனை (கடவுளை) அடையாளம் கண்டு மகிழ்பவன், ஆயிரம் பிறைகளைக் கண்டுகளித்தவன் - ஆகிய அத்தனைபேரும் எனது வணக்கத்துக்கு உரியவர்கள்’ என்று கண்ணன் சொல்வார்.
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ மாசோப்வாசீ சபதிவ்ரதாச
வேதாந்தவித் சந்திரஸஹஸ்ர தர்சீ ஷட ஜீவலோகெ மமவந்த நீயா:
‘ஒவ்வொருவரும் ஒவ்வோர் அறத்தைச் செழிப்பாக்க முனைந் திருக்கிறார்கள். அத்தனைபேரும் ஓர் இனமே! அதாவது அறம் காக்கும் இனம். அவர்களை வணங்குகிறேன்’ என்கிறார்.
புராணங்களின் வழிகாட்டல்...
பயிர்வளம் பெற்று, நாடு உணவில் தன்னிறைவு காண வேள்வியை மேற்கொண்டார் ரந்திதேவன். மக்களுக்கு அன்னதானம் அளித்த திருப்தியில் உண்ண உட்கார்ந்தார். அந்தத் தருணத்தில் பசியோடு ஒருவன் தோன்றினான். தனக்கு அன்னம் பரிமாறிய இலையை அவனுக்கு அளித்தார் ரந்திதேவன். அடுத்து, நீரைப் பருக முயன்றார். அப்போது தாகத்தோடு வந்த ஒருவன் நீரை வேண்டினான். அவனுக்கு பாத்திரத்தோடு நீரை அளித்துவிட்டார். ‘‘எனக்கு அரச போகமும் வேண்டாம், மறுபிறவியற்ற மோக்ஷமும் வேண்டாம். துயரத்தில் ஆழ்ந்த உயிரினத்தின் வேதனை அழிந்தால் போதும். முதல் இரண்டையும்விட இதையே மேலாக எண்ணுகிறேன் (காமயே துக்கதப்தானாம் ப்ராணினாம் ஆர்த்தி நாசனம்)” என்பது அவர் எண்ணம். பசியும் தாகமும் உயிரினங்களைப் பாதிக்கக்கூடாது என்ற எண்ணம் பெரிய அறமாகத் திகழ்ந்தது அன்றைய பாரதத்தில்.
உலகம் உய்ய, யுதிஷ்டிரர் வேள்வியை ஏற்றார். ராமரும் வேள்வி யில் இணைந்தார். ராஜசூய யாகத்தில் நாட்டை வளமாக்கினார் யுதிஷ்டிரன். சீதையைக் காட்டுக்கு அனுப்பினார் ராமர். பத்தினி இன்றி வேள்வியில் இணைய முடியாது என்ற நிலையில், தங்கத்தால் ஆன சீதையின் உருவத்தோடு வேள்வியை நிறைவு செய்தார் ராமர். தனது துயரத்தைப் பொருட்படுத்தாமல், அரச பரம்பரையின் அறத்தைப் பாதுகாத்தார்.
அறம் போற்றுவோம்!
அன்னதானம், ஏழ்மையில் தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. அதன் மூலம், கிடங்குகளில் சேமிக்கப்படும் தானியங்கள் வீணாவதும் தவிர்க்கப்படும். அன்னதானம், கொடை என்ற நோக்கில் மக்கள் மனதில் பண்பை வளர்க்கிறது. அதோடு அடித்தளத்து மக்களுக்கு முன்னேற உதவுகிறது. வேள்வி, வானவர்களை மகிழ்விக்கும். அதனால், அவர்கள் அருள் மழை பொழிந்து, பயிர் வளம் சிறப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கிடைத்து விடுகிறது. மட்டுமின்றி, ஆறு பருவகாலங்களும் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. அன்றைய அரச பரம்பரையும் வேள்வியைத் தழுவினார்கள்.
ஏகாதசியில் உணவை ஏற்காமல் இருந்து இறைவனை வழிபட்டு, மறுநாள் த்வாதசியில் உணவை ஏற்க வேண்டும். அந்த வழிபாடு, த்வாதசி பாரணையில் நிறைவுபெறும். அம்பரீஷன் ஏகாதசி உபவாசம் இருந்து, த்வாதசி பாரணைக்கு துர்வாசரை அழைத்திருந்தான். அவர் வருவதில் காலதாமதம் ஏற்பட்டவுடன், விரதத்தின் பலன் வீணாகாமல் இருக்க, அவர் வராமலேயே பாரணையை முடித்துக்கொண்டான். துர்வாசரின் கோபத்துக்கு ஆளாகி அவதியுறும்போது, ஸ்ரீமந்நாராயணரின் சக்கரம் அடைக்கலம் அளித்து, துர்வாசரைப் பணியவைத்தது என்கிறது புராணம். விரதத்தில் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்; அதே வேளையில் கடவுள் வழிபாடும் ஈடேறிவிடும்.
உபவாசம் என்பது மருத்துவ சிகிச்சையாகவும் மாறிவிடும். பாம்பு சீண்டியவன் இரவு அத்தாழத்தை (ஊண்) தவிர்த்தால், அதன் விஷம் பரவாமல் அடங்கி விடும். காலையில் எழுந்ததும் உணவுக்கு முன்பு மருந்தை உட்கொள்வது உண்டு. உபவாசம் ஆமாசயத்தில் தங்கிய உணவை ஜீரணிக்க உதவும். அது ஆரோக்கியத்துடன் நில்லாமல் மனக்கட்டுப்பாட்டையும் அளிக்கும்.
பாதுகாப்பு தரும் பதிவிரதா தர்மம்!
இன்றைய சூழலில், பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே தொடர்கிறது.
அன்றைய நாளில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் இல்லை. ஆனால், பாதுகாப்பு வலுவாக இருந்தது.
அனசூயையின் ஆசிரமத்துக்கு விருந்துண்ண வந்த மும்மூர்த்தி களும், அனசூயை ஆடையின்றி விருந்தோம்பலை நிறைவேற்ற வேண்டும் என்று நிபந்தனை வைத்தார்கள். அனசூயை மனம் தளரவில்லை. தனது ‘பதிவ்ரதை’ வலிமையால், மூவரையும் சிறு குழந்தைகளாக மாற்றிவிட்டாள். ‘ஆதவன் தோன்றினால் கணவன் இறந்துவிடுவான்’ என்ற நிலையில், நளாயனி தனது பெருமையால் ஆதவனை தோன்றாமலே செய்துவிட்டாள். இப்படி, தங்களின் தற்காப்புக்குப் பிறரை எதிர்பார்க்காமல் வாழ்ந்தார்கள். சீதையும் திரௌபதியும்கூட தற்காப்புக்குப் பிறரை எதிர்பார்க்கவில்லை. அகல்யை, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி போன்றவர்கள் இக்கட்டான சூழலில் தங்கள் பாதுகாப்புக்குப் பிறரை எதிர்பார்க்கவில்லை (அஹல்யா த்ரௌபதி சீதா...).
சட்டத்தால் மட்டும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கமுடியாது என்பதைத் தெரிந்துகொள்ள இன்னும் பல காலம் பிடிக்கும். இதய பரிவர்த்தனமே அதற்குத் தீர்வு! பதிவ்ரதையில் இருக்கும் ஒழுக்கம் அதை நிறைவேற்றும். பெண்களின் ஆரோக்கியத்துக்கும் பண்புக்கும் அது ஒத்துழைக்கும். எங்கு பெண்மை போற்றப்படுகிறதோ, அங்கு தேவதைகள் ப்ரசன்னமாவார்கள் (யத்ர நார்யஸ்து பூஜ்யத்தை ரமந்தை தத்ரதேவதா:). தாம்பத்தியத்திலும் சமுதாயத்திலும் அவர்கள் பங்கு உயர்ந்தது. அறத்துக்கு அவர்கள் அடித்தளம் என்கிறது சாஸ்திரம் (ஸ்த்ரீமூலம்ஹிதர்ம:).
ஆனந்தம் அளிக்கும் ஆயிரம் பிறை தரிசனம்!
அறத்தின் மூலமான வேதம் பாதுகாக்கப்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தோடு உள்ளமும் தெளிவாக இருக்கவேண்டும். இன்ப- துன்பங்களை உணர்வது மனம். அதன் தூய்மையில் கவனம் தேவை. துயரம் தொடாத இன்பத்தை எட்ட வேதாந்தம் (வேதத்தின் சிறந்த பகுதி உபநிடதம்) வேண்டும்.அதை அறிந்தவனாக மாறினால், அவன் பங்களிப்பு சமுதாயத்தை சிறப்பாக்கும். ஆயிரம் பிறைகளைப் பார்த்து மகிழ அவன் ஆயுள் நீடித்து இருக்கவேண்டும். அதுமட்டும் போதாது; உடல் ஆரோக்கியமும் உள்ளத் தூய்மையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் கண்டு களித்து இன்பத்தை உணர இயலும். அவனது நீண்ட ஆயுளை ஈட்டித் தந்தது, அவன் செயல்படுத்திய அறம். ஒழுக்கத்தோடும் அறத்தின் கோட்பாட்டுக்கு இணைந்தும் வாழ்பவனுக்கு ஆயிரம் பிறை தரிசனம் ஆனந்தம் அளிக்கும். இப்போது இந்தச் செய்யுளை அசைபோடுங்கள்...
நித்யான்னதாதா தருணாக்னிஹோத்ரீ மாசோபவாசி சபதிவ்ரதாச
வேதாந்தவித் சந்த ஸஹஸ்ரதர்சி ஷட் ஜீவலோகெ மம வந்தநீயா:
இதன் ஒவ்வொரு வரியையும் அலசி ஆராய்ந்து பாருங்கள். பண்பான வாழ்க்கைக்குத் தேவையான விளக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மனதில் பொங்கி வரும். பழைமை என்று எதையும் ஒதுக்க முடியாது; புதுமை என்று எதையும் ஏற்கமுடியாது என்ற முடிவை எட்டும் உங்களது ஆராய்ச்சி. ‘எதையும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்’ எனும் காளிதாசனின் முதுமொழி (ஸந்த: பரிக்ஷ்ய அன்யதரத்பஜந்தை) எல்லோர் காதிலும் விழ வேண்டும்!