12 அன்பின் வகைகள் - அன்பே கடவுள் !!!

அன்பே கடவுள் !!!

கடவுள் அன்பே வடிவானவர். அவர் எல்லாவற்றிலும் மறைந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொன்றிலும் தெளிவாகப் பார்க்கக் கூடியவராகவும் இருக்கிறார். நாம் தெரிந்தோ தெரியாமலோ அவரிடம் இழுக்கப்படுகிறோம். ஒரு பெண் தன் கணவனிடம் அன்பு செலுத்தினால் அவனிடமுள்ள கடவுளாகிய மகத்தான இழுப்பாற்றலே அவளை அன்பு செலுத்தத் தூண்டுகிறது. நாம் வழிபட வேண்டியது கடவுளாகிய இந்த அன்பு ஒன்றையே.

நாம் அவரை இந்த உலகைப் படைத்தவராகவும், காப்பவராகவும் நினைத்துக் கொண்டிருக்கும் வரையில் புறவழிப்பாட்டை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து சென்று, அவரை அன்பின் உருவாகாக் கொண்டு எல்லாவற்றிலும் அவரையும், அவரில் எல்லாவற்றையும் காணுவதே பக்தி.

அன்பின் வகைகள்

அன்பில் பல வகை உண்டு. இடம் மாறி செலுத்தப்பட்ட அன்பே துயரங்களுக்குக் காரணம். அன்பில்லாமல் எந்த உருவாக்கமும் இல்லை. நமது பிறப்பும் கூட அன்பைச் சார்ந்ததே.

அன்பில் 12 வகைகள் உண்டு.

1.இரக்கம் - எளியவர் மேல் காட்டுகிற அன்பு.

2.கருணை - அறிவு பலமும், உடல் பலமும் இல்லாத மனிதர்கள் மீது காட்டப்படுகிற அன்பு.

3.ஜீவகாருண்யம்- எல்லா உயிர்களிடத்திடமும் அன்பு.

4.பந்தம் - உறவினர்களிடத்து நாம் செலுத்தும் அன்பு.

5.பட்சம் - முதலாளி, வேலைக்காரரிடம் செலுத்தும் அன்பு.

6.விசுவாசம் - வேலை செய்பவர் தன் முதலாளியிடம் செலுத்தும் அன்பு.

7.பாசம் - தாய், குழந்தைகளுக்கிடையே உள்ள அன்பு.

8.நேசம் - தன்னையொத்த நண்பர்களிடையே நிலவும் அன்பு.

9.காதல் - கணவன், மனைவிக்கிடையே உள்ள அன்பு.

10.பக்தி - கடவுள் மேல் பக்தன் செலுத்தும் அன்பு.

11.அருள் -பக்தன் மேல் கடவுள் செலுத்தும் அன்பு.

12.அபிமானம் - ஒரு தேசம் அல்லது சமுதாயத்தின் மீது செலுத்தப்படுகிற அன்பு.

அன்பை நிலை மாறிச் செலுத்தினால் சிக்கல், துயரம், நிலை உணர்ந்து செலுத்தப்படும் அன்பு நன்மை தரும்.