பழநி முருகன் கோவில்

பழநி முருகன் கோவில் !!!
தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி ஆகும்.
கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடைந்துவிடலாம். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இனி கோவிலைப் பற்றி பார்க்கலாம்.
தல வரலாறு:
இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தை கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார்.
பின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில் வந்து தங்கிவிட்டார்.
சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை "பழம் நீ" என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்ப்டுவது.
அமைவிடம்:
இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்கு சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளை தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையை தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழிக்க, இடும்பன் இறந்தான்.
பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு.
மூலவர் சிற்பம்:
இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளை கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையை பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார்.
அப்படி சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்த சிலையே தற்போது பழநி முருகனாக நமக்கு காட்சியளிக்கிறது.
பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடையே சமாதியை போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.
சிறப்புகள்:
கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் "அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்" என்பதாகும்.
முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு.
பெரும்பாலும் தமிழக கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!
பூஜைகள் மற்றும் விழாக்கள்:
தினசரி இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. விழாக்களை பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு இங்கு தங்கத் தேர் பவனியும் தினந்தோறும் மாலை நடைபெறுகிறது. வேண்டியவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்:
திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
மாரியம்மன் கோவில்
பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
வேலப்பர் கோவில், கொடைக்கானல்.
வசதிகள்:
வழிபாடு செய்ய ஏற்ற வகையில் பொது தரிசன வழி மற்றும் சிறப்பு தரிசன வழிகள் உள்ளன.
முடிக்காணிக்கை செலுத்துவதற்கு அடிவாரத்தில் பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பழநியின் சிறப்பான பஞ்சாமிர்தத்தை வாங்க மலையிலும் அடிவாரத்திலும் கடைகள் உள்ளன.
பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப தண்டபானி நிலையம், கார்த்திகேயன் விடுதி, கோஷால விடுதி, வேலவன் விடுதி ஆகியனவும் உள்ளன.
எப்படி செல்வது?
பழநிக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சென்னை, கொடைக்கானல், தாராபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல், 48 கி.மீ தொலைவில்.
அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 85 கி.மீ தொலைவில்.
மலையேறுவதற்கு படிக்கட்டுகள், யானைப் பாதை, வின்ச் ரயில், ரோப் கார் போன்றவற்றை பயன்படுத்தலாம்.