கோயிலில் சாமி கும்பிட வரும்போது ஊர்க்கதைகள் பேசுகிறார்கள்

சிலர் கோயிலில் சாமி கும்பிட வரும்போது ஊர்க்கதைகள் மற்றும் குடும்பக் கதைகளை பேசுகிறார்கள்.

 இது எவ்வாறு சரியானதாக இருக்கும்?


அவர்கள் பேசுவதை நீங்கள் ஏன் காது கொடுத்து கேட்கிறீர்கள்? ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் ஆண்டவனின் மீதுதானே மனம் லயிக்க வேண்டும்? அதனை விடுத்து அடுத்தவர் மீது கவனம் செல்வது ஏன்? எந்த ஒரு காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன் மனம் ஒன்றிச் செய்துகொண்டிருக்கும் தருணத்தில் சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் மீது நம் கவனம் செல்வதில்லை.
அவ்வளவு ஏன், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மனம் லயிக்கும்போது நம் வீட்டு மனிதர்கள் பேசுவது கூட நம் காதுகளில் விழுவதில்லை. வீண் மாயையில் மனம் லயிக்கும்போது, இறைவனின் பால் மனம் செல்லாதது யார் குற்றம்?
ஆலயத்திற்குள் ஊர்க்கதைகளையும், குடும்பக்கதைகளையும் பேசுவது எந்த அளவிற்கு சரியில்லையோ, அதைவிட அந்த வீண் கதைகளின் மீது நம் கவனத்தை செலுத்துவது, மிகமிக அற்பமானது. நம் துன்பங்கள் அத்தனையையும் மறந்து இறைவனின் திருப்பாதங்களைச் சரண் அடைவதற்காகத்தான் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அந்த ஆலயத்திற்குள் நுழையும்போதாவது இதுபோன்ற வீண் மாயைகளில் உங்கள் கவனத்தைச் செலுத்தாமல் இறைவனது திருநாமத்தை மட்டுமே மனதிற்குள்
உச்சரித்தீர்களேயானால் மனம் அமைதி கொள்வது நிச்சயம். உங்கள் மனதிற்குள் ஒலிக்கும் இறைவனது திருநாமத்தைத் தவிர வேறு ஒன்றும் உங்கள் காதுகளுக்குக்
கேட்காது. முயன்றுதான் பாருங்களேன்..!